ஜெட் வேகத்தில் வளரும் இ-காமர்ஸ் சந்தை!

இந்திய இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு 2022ஆம் ஆண்டில் 100 பில்லியன்
டாலராக உயரும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் துறை அமைப்பான நாஸ்காம்இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘தற்போது இந்திய இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு 35 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. தற்போதைய ஆன்லைன் வர்த்தகத்தில் ஆன்லைன் சில்லறை வர்த்தகமும், ஆன்லைன் டிக்கெட் பதிவும்தான் 90 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளன. எதிர்காலத்தில் ஆன்லைன் நிதிச் சேவையில் மிக வேகமான வளர்ச்சியைக் காணலாம். 2023ஆம் ஆண்டுக்குள் இந்திய இ-காமர்ஸ் சந்தையில் கூடுதலாக 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய இ-காமர்ஸ் சந்தை 25 விழுக்காடு வளர்ச்சியைக் காணும். இதன் காரணமாக 2022ஆம் ஆண்டுக்குள் இந்திய இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக அதிகரிக்கும். அதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஆன்லைன் வாடிக்கையாளர்களில் நான்கில் மூவர் இரண்டாம் அடுக்கு நகரங்களில் வசிப்பவர்களாகவே இருப்பர்’ என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும். இதன் காரணமாகவும் ஆன்லைன் வர்த்தகம் விரிவடையும் எனவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாஸ்காம் தலைவர் தேப்ஜானி கோஷ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இ-காமர்ஸ் தளங்கள் வளர்ச்சியடைவதால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடையும். உள்ளூர் தொழில்களையும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் தளமாகவும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் உருவெடுக்கின்றன. அதேநேரத்தில் அந்நிய நேரடி முதலீடுகளும் அதிகரிக்கின்றன” என்றார்.

No comments

Powered by Blogger.