பாலியல் புகார்: பதிவு செய்ய மறுப்பு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரின் பாலியல்
முறைகேடு குறித்து விசாரணை மேற்கொள்ள தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்தாலும், அதுகுறித்த புகாரைப் பதிவு செய்ய முடியாது என்று கேரள மகளிர் ஆணையத் தலைவரான ஜோசபின் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் சொர்ணூர் தொகுதி எம்எல்ஏ பி.கே.சசி தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக, டிஒய்எப்ஐ அமைப்பைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் புகார் தெரிவித்தார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ய முடிவெடுத்துள்ளது. ஆனால், கேரளாவிலுள்ள மகளிர் ஆணையம் இந்த புகாரைப் பதிவு செய்ய முடியாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் குழு இதுபற்றி விசாரணை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 6) இதுபற்றிப் பேசிய கேரள மகளிர் ஆணையத் தலைவரான எம்.சி.ஜோசபின், இதுவொன்றும் புதிதல்ல என்று கூறினார். “நாம் எல்லோரும் மனிதர்கள்; தவறுகள் நடக்கும். கட்சியில் உள்ள சிலர் இதுபோன்ற தவறுகளை இதற்கு முன்னர் செய்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார். “இதுபற்றி அந்தப் பெண் மகளிர் ஆணையத்தில் எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை. தானாக முன் வந்து வழக்கை எடுத்துக்கொள்ள முற்பட வேண்டுமென்றால், இந்த விவகாரம் பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணோ, ஊடகங்களோ தக்க தகவல்களை வெளியிட வேண்டும். இந்த விஷயத்தில் அது நடைபெறவில்லை. அப்படியிருக்கும்போது, எப்படி வழக்குப் பதிவு செய்வது” என்று கேள்வி எழுப்பினார் ஜோசபின்.
இதுபோன்ற புகார்களைக் கையாள்வது பற்றி மார்க்சிஸ்ட் கட்சி மேலிடத்துக்கு நன்கு தெரியும் என்று அவர் கூறினார். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, மாநில மகளிர் ஆணையம் வேடிக்கை பார்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது பாஜக. சசி மீது குற்றம் சுமத்திய பெண், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியன்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான பிருந்தா காரத்துக்கும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கும் புகார் கடிதம் அனுப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.