வலுவான நிலையில் இங்கிலாந்து!

மிடில் ஆர்டர் வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 198 ரன்களுக்கு 7
விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணி, ஜாஸ் பட்லரின் அரைசதத்தால் வலுவான ஸ்கோரை எட்டியுள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. அலெஸ்டர் குக்-கீட்டன் ஜென்னிங்ஸ் ஆகியோர் ஏற்படுத்திக் கொடுத்த சிறப்பான தொடக்கத்தால் நேற்று இங்கிலாந்து அணி வலுவான ஸ்கோரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது இந்திய பந்துவீச்சாளர்கள் திடீரென எழுச்சி கொண்டு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை உண்டாக்கினர். 1 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி, அடுத்த 7 விக்கெட்டுகளை வெறும் 81 ரன்களுக்கு பறிகொடுத்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. ஜாஸ் பட்லர் 11 ரன்களுடனும், அடில் ரஷீத் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பந்துவீச்சாளர்களின் எழுச்சியைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியா இன்றைய ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தைத் தொடர நினைத்தது. அதற்கேற்ப வியூகங்களை அமைத்து அடில் ரஷீத்தின் விக்கெட்டை வீழ்த்திய போது இந்திய அணி மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் அடுத்த சில நிமிடங்களில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துவிடும் என்றே தோன்றியது. ஆனால் அடுத்துவந்த ஸ்டூவர்ட் பிராட், அந்த எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி ஜாஸ் பட்லருடன் இணைந்து பாட்னர்ஷிப்பை தொடர ஆரம்பித்தார்.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்ட பட்லர் டெஸ்ட் அரங்கில் தனது 10ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி 9ஆவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்து உணவு இடைவேளை வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது.
உணவு இடைவேளைக்கு பின் திரும்பிய இங்கிலாந்தின் அடுத்த இரு விக்கெட்டுகளும் அடுத்தடுத்து விழுந்தன. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 332 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
இரண்டாவது ஓவரிலேயே இந்தியாவின் முதல் விக்கெட் விழுந்தது. 3 ரன்கள் எடுத்து ஷிகர் தவன் ஆட்டமிழந்தார். தற்போது இந்தியா 1.1 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. கே.எல்.ராகுல் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.