எனது இதய வலியில் நிறைந்த ஈழத்து பாசமும் தாய்ப்பாசமும்!

தோழிக்கு அழைப்பை ஏற்படுத்தி நான் யாழ்ப்பாணம் வந்துவிட்டேன்,நீ எவடத்த வாறாய் என்று கேட்டேன்,நானும் கிட்ட வந்திட்டன் கொஞ்சநேரம் நில் வந்திடுறேன் என்று எழில்விழி கூறிமுடித்தாள்
எழில்விழி என்பது அவள் போராளியாக இருக்கும்போது வைக்கப்பட்ட பெயர்.இன்றும் நான் அவளை எழில்விழி என்றே அழைப்பேன்.
எழிலும் வந்துவிட்டாள்,இருவரும் சேர்ந்து முல்லைத்தீவு பஸ் எடுத்தோம்,பஸ்சில் ஏறிவிட்டோம்,என் வன்னி மண்ணை பார்க்கப்போகிறேன்,அந்த வீரம் செறிந்த மண்ணையும் பல உயிர்கள் குற்றுயிராய் கிடந்த மண்ணையும் பார்க்கபோகிறோம்,
நாம் எப்போது போன்பண்ணி கதைக்கிறமோ அப்போதெல்லாம் கதைக்கிற கதை,சமுர்த்தி லோன் கட்டிட்டியா,..?இலங்கை வங்கிலோன் கட்டிட்டியா...?என்றுதான் கேட்டுக்கொள்வோம்,இல்லாவிட்டால் அவள் எனக்கு உதவி செய்வாள்.அல்லது நான் அவளுக்கு உதவிசெய்வேன் மாறிகொடுத்து.இப்படி மட்டுமே எம் உரையாடல் முடிந்துபோகும்,
இவ்வளவு நாள் உரையாடலிலும் நேற்றுத்தான் இருவரும் உணர்வுபூர்வமா கதைத்திருந்தோம்.வட்டுவாகல் பாலத்தை ஒருக்கா பார்க்கணும் என்று.அதுதான் இருவரும் வெளிக்கிட்டோம்.எம் மனநிலை புரியாமல் பஸ்சும் மெதுவாக ஊர்ந்தபடி இருந்தது.பஸ் சீரான வேகத்தில்தான் பயணித்து என் அவாதான் இப்படி சிந்திக்க வைத்தது.
இவளவுகால போராட்டத்தில் இறுதியாக நாம் இரத்தம் சிந்தியபகுதி,அந்த பாலத்தில்தான் பல பிணங்களை கடந்து வந்தோம்,பல பிணங்கள் கற்பாறைகளுக்கு இடையில் வெளுத்துப்போய் இருந்ததையும் பார்த்துவந்தோம்,
இன்று இறுதி யுத்தத்தோடு நின்று வந்த யாவரும் நினைவில்கொள்ளும் ஓர் இடமும் அந்த பாலம்தான்,
எனக்கு பிடித்த இடைக்கால பாடலான "பெண்மை கொண்ட மௌனம் பிரிந்தாலும் நெஞ்சில் சலனம்" ஒலித்துக்கொண்டிருந்தது,அப்பாடலை நான் ரசிக்கும் நிலையிலும் இல்லை,நாம் இறங்க வேண்டிய இடத்திற்கு முன்பே இறங்கிகொண்டோம்.பல இடங்கள் சுற்றிப்பார்த்தோம் போட்டோ எடுத்தோம்.வீதியால் போன தம்பி ஒருவன் என்ன அக்கா போயும் போயும் காட்டுக்க நின்று போட்டோ எடுக்கிறீங்கள் என்று கேட்டான்.
அவனுக்கு எங்க புரியபோகுது அந்த காட்டின் மகிமை,எம் வாழ்வில் வசந்தம் என்ற ஒன்றை அனுபவித்தது என்றால் அந்த காட்டுவாழ்வில்தான் என்பதையும் அந்த இனிமையான காட்டுவாழ்வு மீண்டும் கிடைக்கமாட்டுதா என்று நாங்கள் ஏங்குவது இந்த பொடிப்பயலுக்கு எங்க புரியபோகுது..?
மறுவீதிக்கு சென்றோம்,பழைய சூட்கேஸ் பழைய ஆடைகள் பாத்திரங்கள் எல்லாம் கறல்பிடித்து கிடந்தது,பல இடங்கள் கடந்துசென்றோம்,அதன் அருகில் உள்ள ஆலமரத்தடிதான் நான் முள்ளிவாய்காலில் இறுதியாக நான் இருந்த இருப்பிடம்,
என் கண்கள் குளமாகியது,ஏனெனில் அந்த இடத்தில்தான் என்தோழி செஞ்சுடரை றவுன்சில் பறிகொடுத்திருந்தேன்,
என் பழைய நினைவுகள் என்னைசூழ்ந்துகொண்டது.
நான் போராளியாக இருந்தபோது மக்கள் கோம்பாவில் பகுதியில் இருக்கும்போதே நான் என் வேலைகளிற்காக முள்ளிவாய்க்கால் வந்துவிட்டேன்,பங்கர் வெட்டமுடியவில்லை.அதனால் பனங்குற்றிகளை கொண்டு செல்டர் பங்கர் அமைத்துக்கொண்டேன்,
மக்கள் அனைவரும் இராணுவம் முன்னேறி வந்தமையால் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வந்துவிட்டார்கள்,தொண்டு நிறுவனங்களும் கஞ்சி கொடுப்பதை நிறுத்தியிருந்தது.
மக்கள் பசியில் துடித்தார்கள்,போராளிகளின் முகாம்களிற்கே பலர் உணவுதேடி வந்தார்கள்,சமைக்கும் பொருட்கள் இருந்தாலும் புகையை கண்டால் உடன அவடத்துக்கு செல்வந்து விழும்,நாமும் எம் மக்களைப்போல்தான் உணவின்றி வாடினோம்,
உண்மையில் சொல்லப்போனால் எனக்கு சாப்பிடாமவிட்டு வயிற்றுப்புண்கூடி வாயெல்லாம் புண்ணாகிப்போய் இருந்தது.இன்னொருவருடன் கதைப்பதற்கோ சக்தி இல்லை என்ற நிலையில் இருந்தேன்,காஞ்சமாடு கம்பிலதடக்கி விழுந்தபோலான் என்உடல் நிலை,
காலையில் 6-00மணிக்கு வரும் றோன்(தானியங்கி விமானம்) மாலை போகும்வரை பங்கர் வாழ்க்கை.வெட்கை ஒருபக்கம் சாப்பாடில்லா கொடுமை ஒருபக்கம் என்று பொழுதும் நத்தை வேகத்தில் நகர்ந்தபடி இருந்தது,
ஓர் நாள் நான் பங்கரின் வெளியில் இருந்தேன்,சரியான பசிவேறு,என்னோடு காயப்பட்ட மேலும் இரு பெண்போராளிகள் இருந்தார்கள்,அப்போது 4-00 மணி இருக்கும்.வந்த அந்த இளம்பெண் என்னை கண்டதும் திரும்பிப்போவது தெரிந்தது,மறுநாளும் இப்படி நடக்க எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த பிள்ளை வந்திட்டு என்னை கண்டிட்டு ஏன் திரும்பிபோகுது,சரி எங்க போகுதென்று பார்ப்போம் என்று பின்தொடர்ந்துபோனேன்,
அதற்குள் அந்தப்பெண் தறப்பாள் கொட்டில்களுக்குள் மறைந்துபோனாள்,என்ன செய்வது காணேல சரி கொஞ்சதூரம் போய்ப்பார்ப்போம் என்று போனேன்,
அவளை காணவில்லை,திரும்பிவர முயன்றபோது ஓர் அம்மா என் காலடி சத்தத்தை வைத்து பிள்ள இயக்கபிள்ளையள் சாப்பாடு தந்ததுகளே என்று கேட்பது கேட்டது,
அப்போது புரிந்துகொண்டேன் அம்மா தன்மகள் என்று எண்ணித்தான் என்னை கதைகேட்கிறா என்று,
அத்தாய் காயப்பட்டு ஏலாத நிலையில் இருப்பது புரிந்தது,அம்மா நான் இயக்கபிள்ளை அம்மா.என்னம்மா ஏலாதா ...? என்று அருகில் சென்றேன்.என்ர பிள்ளை எனக்கு பசிக்குதடா,நான் சாப்பிட்டு 3 நாள்,எனக்கு சரியா பசிக்குது சாப்பாடு தாம்மா என்றார்.எனக்கு தராட்டியும் என்ர குமர் பசியில இருக்குது,இயக்க அக்காக்களிட்ட சாப்பாடு வாங்கிகொண்டுவாறன் என்று மூன்றுநாளா வந்து கேட்காம திரும்பிவாறாள் அம்மா என்றார்,
என்ர பிள்ளைகளும் இரண்டு மாவீரர்,நானும் இப்ப ஒரு 10 நாள் இருக்கும் காயப்பட்டு என்னால ஏலாதம்மா பசியில சாகப்போறன்,எனக்கில்லாட்டிலும் என்ர பிள்ளைக்கு கொஞ்ச சாப்பாடு குடுங்கோ என்று என் தாய் என்னிடம் கையெடுத்து கும்பிட்டாள்,ஓடிச்சென்று கையைப்பிடித்தேன்,ஏனம்மா இப்படி என்ன கும்பிடுறீங்கள்,என்ர அம்மா வேற நீங்கள் வேற,...? நான் அப்படி பார்க்கேல எனக்கு நீங்களும் அம்மாதான் என்று அந்த தாயின் கைகளை பிடித்து தடவிவிட்டேன்.
போராளி நான் ஆனால் நான் தாயன்பு புரியாதவள் அல்ல,எனக்கு என் அம்மா என்றால் சரியான விருப்பம்,என் அம்மாவின் கைகளையும் பிடித்து ஒரே தடவுவன்,அம்மாக்கு வயசு போடும் என்ற ஏக்கத்தில்.எங்கள் வீட்டில் என் அண்ணாவும் போராளி நானும் போராளி,அண்ணாவின் இழப்போடு நானும் போராளியாகிவிட என்தாய் ஊண்உறக்கம் மறந்தேபோனாள்
,சாப்பிடாமல் இருந்து அல்சரை தேடிக்கொண்டா.அல்சர் நாளடைவில் கான்சராகி மரணத்தின் தறுவாயில் என்னையும் அண்ணாவையும் கூப்பிட்டபடி இருந்தாவாம் என் அம்மா.
இறதியில் அண்ணாவையும் கூப்பிடுவது நிறுத்தி என்பெயரை கூப்பிட்டபடி இருக்க என் அக்கா என்பேயரைசொல்லி நான் வந்துநிற்கிறன் என்று சொல்ல உடலை திருப்பமுடியாத நிலையிலும் என்தாய் ஏக்கத்தோடு தலையை சாய்த்து பார்த்துவிட்டு என்ர பிள்ளை வரேல என்று தலையாட்டிவிட்டு கண்களில் கண்ணீர் வடிய இறந்துபோனாளாம் என்னை பெற்றவள்,என் தாய் இறந்ததை ஒருவருடமாக அறியாமல் இருந்தபாவி நான் .ஒருவருடத்தின் பின்பே அறிந்துகொண்டேன் அம்மா இறந்துவிட்டார் என்று.
என் அம்மாவிற்கு நான் கடிதம் எழுதியிருந்தேன் அம்மா என்னை நினைத்துக்கவலைபட வேண்டாம்,நன்றாக சாப்பிடுங்கள்,யோசிக்காமல் இருங்கோ,உங்களைப்பார்க்க வெகுவிரைவில் லீவில் வருவேன் என்று
அக்கடிதம் அம்மாவின் ஓராண்டு நிகழ்வு தினத்துக்கு முதல்நாளே கடிதம் போய்ச்சேர்ந்தது,என் தாயின் இழப்பை அறியாத பாவியாய் இருந்து அம்மாவிற்கு கடிதம் எழுதியிருந்தேன், தாயின் இறுதிச்சடங்கில் நின்று ஒருதுளி கண்ணீர் சிந்தகூட கொடுத்துவைக்காத பாவப்பட்ட பிறவியாக நான் இருந்தேன்.என் நிலையை நான் எப்படி கூறுவேன்.அதே நிலையில்தான் இன்று இந்ததாய் கையெடுத்து கும்பிடுகிறாள்,
என் அம்மாவின் நினைவோடு அத்தாயை கட்டி அணைத்து அழுதேன் என் கவலைகள் தீரும்வரை,என் கவலைகள் ஓரளவு குறைந்தது.அதற்குள் மகள் வந்துவிட விடைபெற்றேன்,அம்மா கொஞ்சம் பொறுங்கோ சாப்பாடு கொண்டுவாறன் என்று சொல்லிவிட்டு தறப்பாள் கொட்டிலைவிட்டு வெளியேவந்தேன்,எப்படியாவது அம்மாக்கு சாப்பாடு கொடுக்கவேணும் என்று நினைத்து ஓடினேன்,
என்னால் ஓடமுடியவில்லை.ஏனென்றால் எனக்கும் அல்சர்கூடி நடக்கவே முடியாதநிலை,வாயால் ஒரே இரத்தம் வந்தபடி இருக்கும்,என்உடல்நிலையை நான் பார்க்கவில்லை.அத்தாயின் முகமே மனக்கண்ணில் வந்து நின்றது.
தானியங்கி விமானம் என்னை படம் எடுத்துவிட்டாள் அக்கணப்பொழுதே மரணம் நிச்சயம் என்றநிலை,நான் மரணித்துபோகலாம்,என்னால் எம்மக்கள் உயிர் அநியாயமாகபோகக்கூடாது என்று நினைத்துவிட்டு ஒரு உரபாக்கை தலைக்குமேல் பிடித்துகொண்டு மறைவான இடங்களிற்குள்ளால் ஓடினேன்,
ஆண்களின் கிச்சினில்தான் சாப்பாடு கேட்டுப்போனேன்,பசியில் நாங்கள் இருந்தபோதுகூட இப்படி வந்து சாப்பாடு கேட்கேல,மாவீரனை மண்ணிற்காக கொடுத்தவள் பசியில் வாடும்போது எப்படி நான் பேசாமல் இருப்பது,
அங்கு சென்று அண்ணா சாப்பாடிருந்தால் ஒரு காயப்பட்ட போராளிக்கு கொஞ்சம் தருவீங்களா என்றேன்...?எங்க தங்கச்சி அடுப்பை மூட்டி புகைகொஞ்சம் வரவே அவடத்துக்க செல்விழுகுது,அதுக்க எப்படி கஞ்சி காய்ச்சுற.விடிய 5 மணிக்கு கஞ்சி காய்ச்சிபோட்டு வச்ச டாசர் அங்க இருக்கு கஞ்சி இல்ல தங்கச்சி என்றார்.
என்னால் போகமுடியவில்லை.அந்ததாயின் முகம்தான் கண்முன் வந்தது,ஓடிச்சென்று டாசரை நிமிர்த்தி அடிப்புடிச்ச கஞ்சியை கைகளால் வழித்து பாதி சிரட்டைக்குள் விட்டுக்கொண்டு வந்தேன்,
செல் அடிதொடங்கியது.எங்கும் மரணஓலம்,என் இருப்பிடம் எல்லாம் விழும்சத்தம் கேட்டது.என்னை நம்பி இரண்டு காயப்பட்ட போராளிகள் இருந்தவளே.அவளேக்கு ஏதும் நடந்தால் என்ன செய்வது செல்வரும்போது படுப்பதும் கிடைக்கும் இடைவெளியில் ஓடுவதுமாக இருந்தேன்,என் தாய்க்கு கொண்டுபோகும் கஞ்சி.கவனமாக ஊற்றிவிடாது பார்த்தேன்,
செல்லடி ஓய்ந்தது.ஓடிப்போய் என் தோழிகளைபார்த்தேன்,எதுவும் சேதம் இல்லை என்று புரிந்தது,எப்படியும் என் தாய்க்கு கஞ்சியை கொண்டுபோய் என்ர கையால பருக்கிவிடனும் என்று கொண்டு ஓடினேன்,அப்போது அருகில் இருந்த போராளி அண்ணாக்கள் கூப்பிட்டார்கள் வான்மதி அக்கா செல்பீஸ் அடிக்குது படுங்கோ நிலத்தில என்று.ஆனால் அக்கணம் என்னால் அவற்றை கிரகிக்கவே முடியாமல் இருந்தது,
என்தாய் என்னிட்ட பசிக்குது புள்ள என்று கையெடுத்து கும்பிட்டது மட்டமே எனக்கு நினைவில் நின்றது,
காயப்பட்டாலும் பறவாயில்ல அம்மாவின் பசி தீரனும்,அதுமட்டும்தான் என் இறுதிஆசையாக இருந்தது,ஏலாத உடல் நிலையிலும் ஓடிப்போனேன்,
என் தாயவள் இருந்த தறப்பாள் கொட்டிலை காணேல.பதறிதுடித்தேன்,அப்போதுகூட கொண்டுவந்த கஞ்சியை கவனமாக ஒரு இடத்தில் வைத்துவிட்டே தேடினேன்,
என்ன பரிதாபம் என் தாயவளின் உடல் சிதறுண்டு கிடந்தது,தங்கை உடல் மரக்கிளை ஒன்றில் தலைகீழாக தொங்கியபடி இருந்தது.அழுதேன் பெரிதாக, அம்மா கஞ்சி கொண்டுவந்திருக்கிறன் அம்மா,நான் என்னம்மா செய்வேன் செல் அடிக்க பீஸ் பறக்க பறக்க என் உயிரையும் பொருட்படுத்தாது ஓடிவந்தனே,
என் தாய் போய்விட்டாளே,அந்த இயக்கபிள்ளை சாப்பாடு கொண்டுவரும் என்று ஏக்கதோடு பசியில் படுத்திருந்தவளை கொடிய அரக்கன் செல்லினை ஏவி அழித்துவிட்டானே கடவுளே
அந்த துயரில் இருந்து அன்று மட்டுமில்ல இன்றுவரை என்னால் மீளமுடியவில்லை.
மரணத்தின் தறுவாயில் என் வருகையை எதிர்பார்த்திருந்த என்னை பெற்ற தாய்,மற்றயது என்னிடம் கஞ்சிகேட்ட மாவீரனின் தாய்.தாயை நேசிப்பவன்தான் தாய் நாட்டை நேசிப்பான் என்ற தலைவன் சிந்தனைபோல நான் நேசித்த என் தாய்மார் என் தாய்நிலம் இரண்டையும் பறிகொடுத்துவிட்டேன்,என் தாயின் மரணத்திற்கு பழிகாரி நான் என்று எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கிறேன்,
உண்ணாமல் உறங்காமல் குளத்து நீர் குடித்து எம்மக்கள் மகிழ்வாக வாழ எம்வாழ்வையும் தொலைத்துவிட்டோம்,அங்கங்களை இழந்தோம்,எல்லாமே வீணாகிப்போய்விட்டதா..?எம்மைப்போல எத்தனை ஆயிரம் போராளிகள் ஏங்கியபடி உள்ளோம்,
எல்லோரும் கூறுகிறார்கள் மகிழ்ச்சியாக இரு யோசிக்காத என்றால் எப்படி முடியும் இவளவு உயிர்களையும் இழந்தபின்,.?வலித்துக்கொண்டே இருக்கிறது.....கலங்கி நின்ற என்னை எழில் சரி கவலபடாத வா அங்கால நான் இருந்த இடத்தை பார்ப்போம் என்று அழைத்துச்சென்றாள்,... அவ்விடத்தைவிட்டு கண்ணீருடன் நகர்கிறேன்,.....
*** பிரபா அன்பு***

No comments

Powered by Blogger.