ஊழல்வாதிகள் பதவி விலக திமுக ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசின் ஊழல்களை வெளிப்படுத்தும் விதமாகவும், ஊழல்வாதிகள் பதவி விலக
வேண்டுமெனவும் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 18 ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (செப்டம்பர் 8) சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குட்கா ஊழல், நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் 8 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மான விவரங்கள் பின்வருமாறு...
காவிமயமாக்கும் மத்திய பாஜகவின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம் என்று தலைப்பில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தில், “தமிழக நலன்களைப் புறக்கணிக்கும் பாஜக அரசு, பன்முகத் தன்மையைப் பலியிட்டு, மதவெறிக்கு பச்சைக் கொடி காட்டி, பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் தேச விரோதிகள் என்று சித்திரிக்கப்பட்டு, கொலை செய்யப்படுவதும் கைது செய்யப்படுவதும், ஆங்காங்கே தலித் மற்றும் சிறுபான்மையினத்தவர் குழுக்களாகக் கொலை செய்யப்படுவதும், தாராளமாக அரங்கேறி வருகின்றன.
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குச் சவாலாக, தேர்தல் பின்னணி கொண்ட சர்வாதிகாரத்தை நிறுவி, கடந்த நான்காண்டுகளாக பாஜக வெகுமக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறது. மாநிலத்தில் உள்ள அதிமுக அரசின் அதிகாரங்களைப் பயன்படுத்தியும், திராவிட இயக்க சிந்தனை மற்றும் மதவெறிக்கு மாற்றுச் சிந்தனை கொண்டோர் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடலாம் என்ற பாஜகவின் கனவு நனவாக, திமுக ஒரு போதும் அனுமதிக்காது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுவரை விடுதலை செய்ய வேண்டும்
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து, 10ஆம் தேதி நடைபெறும் பாரத் பந்த் வெற்றி பெற ஒத்துழைப்பது எனவும், அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்து, நியாயமான விசாரணைக்கு வழிவகுத்திட வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி தொடர்பாக “கடைமடைப் பகுதிகளுக்கு மேலும் தாமதமின்றி, காவிரி நீர் முறைப்படி செல்லவும், வருங்காலத்தில் காவிரிநீர் கடலில் வீணாகக் கலப்பதைத் தடுத்து விவசாயத்திற்குப் பயன்படுத்த ஆக்கப்பூர்வ திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊழலின் மொத்த உருவமான அதிமுக அரசு இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செப்டம்பர் 18இல் ஆர்ப்பாட்டம்
இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “முதல்வரின் சம்பந்தி தொடர்பான மிகப் பெரிய அளவில் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள், துணை முதல்வரின் உறவினர்கள் வெளிநாடுகளில் செய்திருக்கும் முதலீடு, குட்கா ஊழலில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருடைய தொடர்பு மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அணிவகுத்து பொதுவெளியில் வந்து கொண்டிருக்கின்றன.
எனவே, இந்த ஊழல் அரசின் முகத்திரையை கிழிக்கும் வகையிலும் ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 18-9-2018 செவ்வாய் அன்று காலை 10.00 மணி அளவில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.