மஸ்கெலியா கவரவில அம்மன் ஆலயத்தில் கொள்ளை!

மஸ்கெலியா - சாமிமலை கவரவில அம்மன் ஆலயத்தில் இருந்த ஒரு தொகை தங்க ஆபரணங்கள் மற்றும் ஆலயத்தில் வைக்கபட்டிருந்த உண்டியல் என்பன உடைக்கபட்டு அடையாளம் தெரியாதவர்களினால் களவாடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலயத்திற்கு பொறுப்பான பூசகர் ஆலயத்திற்கு சென்ற பொழுதே ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு காணப்பட்டதை கண்ட ஆலயத்தின் பூசகர் உடனடியாக ஆலய நிர்வாகத்திற்கு அறிவித்த பிறகு ஆலயத்தின் நிர்வாகம் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

முறைப்பாட்டினை பதிவு செய்த மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவ இடத்திற்கு தடயவியல் விசாரணை அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படவில்லையென மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மஸ்கெலியா கவரவில அம்மன் ஆலயத்தில் 12 பவுண் தங்க நகைளும் ஆலயத்தின் உண்டியலில் 50ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ள இருப்பதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்ய மஸ்கெலியா பொலிஸார் நடவடிக்கைகளை எடுப்பதுடன், மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#Hatton #Nuwara Eliya

No comments

Powered by Blogger.