பகிடிவதைக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படும்!

பகிடிவதையை தடுப்பது தொடர்பான சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்தி, பகிடிவதையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் பகிடிவதைக்கு இடமளிக்க முடியாது எனவும், பல்கலைக்கழக கல்வியின் தரத்தை பாதுகாக்க அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள பொலன்னறுவை தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பகிடிவதை காரணமாக கடந்த காலத்தில் 1,500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வரவில்லை. அத்துடன் பகிடிவதை காரணமாக கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 25 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பகிடிவதை காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் உடல் மற்றும் மனநல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சிறிய தரப்பினரின் இப்படியான மிலேச்சத்தனமான செயல்கள் காரணமாக பெரும்பான்மையான மாணவர்களின் எதிர்காலம் அழிந்து போக இடமளிக்க முடியாது.

சில அரசியல் குழுக்கள் பல்கலைக்கழக மாணவர்களை கபளீகரம் செய்துள்ளன. நாட்டை பொறுபேற்க உள்ள இளம் தலைமுறையினர் மத்தியில் மிலேச்சத்தனத்தை பரப்ப எடுக்கும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


#Maithripala Sirisena   #colombo  #tamilnews 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.