என்மீதான வழக்கு தமிழரசுக்கட்சியின் அரசியல் பழிவாங்கலே!

எனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மற்றொரு அரசியல் பழிவாங்கல் என யாழ். மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்தியதாக எனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மற்றொரு அரசியல் பழிவாங்கல் செயற்பாடு ஆகும்.

எனக்கெதிரான குறித்த வழக்கேட்டின் பிரதி தமிழரசுக் கட்சியின் வட.மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி சயந்தனால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தழிழர் விரோத சக்திகளுடன் கூட்டிணைந்துள்ள அக்கட்சி எனக்கும் என்சார் கட்சிக்கும் எதிராக எடுக்கக்கூடிய இத்தகைய நடவடிக்கைகள் நாம் மிகச் சரியான திசையிலேயே பயணிக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

எனினும் எமக்கெதிராக இவர்கள் எடுத்துக்கொண்டுள்ள ஆயுதம் மிகப் பலவீனமானது என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தும்.

கடந்த காலங்களிலும் நேர்மையாக செயற்பட்ட வீ.நவரட்ணம் போன்றவர்களுக்கெதிராக இவ்வாறான செயற்பாடுகளை தமிழரசுக் கட்சி செய்துள்ளது.

ஈற்றில் அது எங்கு சென்று முடிந்தது என்ற வரலாற்று பாடத்தை அவர்கள் கற்க மறுக்கின்றனர்” என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.