மதிமுக மாநாட்டுக்கு ஸ்டாலின் வராதது ஏன்?

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி ஈரோட்டில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் பிறந்தநாள் விழா,
வைகோவின் பொன் விழா சிறப்பு மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த மாநாட்டில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்வார் என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது மதிமுக மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதிலாக பொருளாளர் துரைமுருகன் பங்கேற்பார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இன்று ஈரோடு மதிமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
“ஆருயிர் அண்ணன் கலைஞர் அவர்கள் உயிரோடு, நினைவோடு இருந்த நிலையில், இந்த மாநாட்டில் தளபதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொள்வது என்று முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இடையில் அண்ணன் கலைஞர் காலமாகிவிட்டார். அதன் பின் ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது முதல் நிகழ்ச்சியாக விழுப்புரத்தில் செப்டம்பர் 15 ஆம்தேதி முப்பெரும் விழாவில் கலந்துகொள்கிறார்.
அதன் முக்கியத்துவம் கருதி, நமது மாநாட்டில் கலைஞர் திருவுருவப் படத்தைத் திறந்து வைக்க திமுக பொருளாளர் சகோதரர் துரைமுருகன் வர இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் முப்பெரும் விழா முடிவான நிலையில், ஸ்டாலினே வைகோவிடம் இந்தத் தகவலை தெரிவித்துவிட்டாராம். தனக்கு பதில் துரைமுருகனை மதிமுக மாநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் வைகோவிடம் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகே இந்தத் தகவலை இன்று ஈரோட்டிலே வெளியிட்டார் வைகோ.

No comments

Powered by Blogger.