ரஃபேல்: பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.
ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக ஒப்பந்தத்தில் பெரிய அளவிலான ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மீடியாபார்ட் என்ற பிரான்ஸ் ஊடகத்துக்குப் பேட்டியளித்த அந்நாட்டு முன்னாள் அதிபர் ஹாலண்டே, “உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனம் தொடர்பாக எங்களுக்கு வேறு எந்த ஒரு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது” என்று கூறியிருந்தார். இதனால், ரஃபேல் ஊழல் பிரச்சினை மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேற்று (செப்டம்பர் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியதாகக் கூறப்படும் தகவல் தொடர்பாக ஊடகங்கள் தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றன. அவரது பேட்டியை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
முன்பே கூறியதுபோல், ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து பணியாற்றுவதற்குத் தேர்வு செய்யப்பட்டதில் அரசுக்கு எந்த தொடர்பும் கிடையாது. ஆஃப்செட் பாலிசி முதன்முதலில் 2005ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்னர் பலமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் போட்டி போடும் அளவுக்கு இந்தியப் பாதுகாப்புத் துறையை ஊக்குவிப்பதே ஆஃப்செட் பாலிசியின் முக்கிய நோக்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது
பாதுகாப்பு ஆஃப்செட் வழிகாட்டுதலின்படி, வெளிநாட்டு அசல் உபகரண உற்பத்தியாளர் (ஓஇஎம்) எந்த ஒரு இந்திய நிறுவனத்தையும் தந்து ஆஃப்செட் பங்குதாரராகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், “இரு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் இது. எனவே, இந்திய அரசுக்கு இதில் தொடர்பில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தித் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.