பொருளாதார நெருக்கடியினால் பாதிப்பு ஏற்படவில்லை!

போர் முடிவுக்கு வந்த பின்னர் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொண்டதன் காரணமாகவே தற்போது, உலக பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்நோக்கி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தளம் வண்ணாத்துவில்லு பொலிஸ் நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடனுக்கு பதிலாக முதலீடுகளை பெற்றுக்கொண்ட நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடியினால் பாதிப்பு ஏற்படவில்லை. ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

10 வருடங்களின் பின்னர் அமெரிக்காவின் பொருளாதாரம் வலுபெற்று டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலகில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் ஏனைய நாடுகளை போல் நாமும் இந்த பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கம் திறந்த பொருளாதார முறையை ஆரம்பித்து அதன் கீழ் வெளிநாட்டு முதலீடுகளை பெற்று அந்நிய செலாவணியை நாட்டுக்குள் கொண்டு வர தேவையான திட்டங்களை உருவாக்கியது.

இதன் கீழ் 200 ஆடை தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. மீன்பிடி தொழில், சுற்றுலாத்துறை, இறப்பர் உற்பத்தி, தேயிலை உற்பத்தி என்பன முன்னேற்றப்பட்டன.

அத்துடன் தொழிற்பேட்டைகள், முதலீட்டு வலயங்கள் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடிந்தது.

எனினும் கடந்த அரசாங்கம் போருக்கு பின்னர் வேறு வழியில் பயணித்தது. வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வர முயற்சிக்காது, பாரியளவில் வெளிநாட்டு கடனை பெற்றது.

இவ்வாறு பெறப்படும் கடன் மூலம் ஏற்பட போகும் கெடுதியான பிரதிபலன்களை நாங்கள் அன்று எதிர்க்கட்சியில் இருந்தவாறு சுட்டிக்காட்டினோம்.

கடனை பெற வேண்டாம் எனவும் நாங்கள் கோரினோம். எனினும் அப்போதைய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், அமெரிக்காவின் பொருளாதார வலுப்பெறும் என நம்பவில்லை. இதனால், முடிந்தளவு கடனை பெறுமாறு ஆலோசனை வழங்கினார்.

இதற்கு அமைய 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பெருந்தொகை கடனாக பெறப்பட்டது. இந்த கடனுக்காக வட்டி மற்றும் தவணையை செலுத்த எமது நாட்டின் வருமானம் போதுமானதாக இருக்கவில்லை.

அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தினர். எனினும் அதுவும் தோல்வியடைந்தது. இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் பதவிக்காலம் முடிய இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் மகிந்த ராஜபக்ச திடீர் தேர்தலுக்கு செல்ல தீர்மானித்தார்.

இந்த தேர்தல் மூலம் 2015 ஆம் ஆண்டு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்ட நாம் முழுக் கடனை செலுத்தும் சவாலை ஏற்றுக்கொண்டோம்.

அது மாத்திரமல்ல நாட்டின் வருமானத்தை படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். இதற்கு அமைய 2025 ஆம் ஆண்டுக்குள் கடனை செலுத்தி, நாங்கள் ஆரம்பித்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பலன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க திட்டமிட்டோம்.

இதற்கு இடையில் தற்போதை பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். இந்த நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் ஏற்றுமதிகளை அதிகரித்து, அந்திய செலாவணியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

2009 ஆம் ஆண்டு இலங்கை கடனை பெற்ற போது, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகள் கடனை பெறவில்லை. அந்நாடுகள் முதலீடுகளை பெற்றுக்கொண்டன.

இதனால், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்த நாடுகளை பாதிக்கவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.