ஸ்டாலின் மீது வழக்கு தொடருவேன்!

தொடர்ந்து தவறான தகவல்களை ஸ்டாலின் வெளியிட்டு வந்தால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி எச்சரித்துள்ளார்.

காற்றாலை மின்சார உற்பத்தியில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி நேற்று அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், “போலியான - பொய்யான கணக்கு தயார் செய்யப்பட்டு 9.17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. காற்றாலை மின்சார ஊழல் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு வழிவிடும் வகையில் அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். மேலும் நிலக்கரி போக்குவரத்தில் ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கமும் குற்றம்சாட்டியிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சென்னையில் இன்று (செப்டம்பர் 20) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, “எதிர்க்கட்சித் தலைவரானவர், ஆளும் கட்சியைக் குற்றம்சாட்டும்போது சரியான ஆதாரங்களுடன் குற்றம்சாட்ட வேண்டுமென நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன், காற்றாலை மின் உற்பத்தியில் முறைகேடு நடைபெற்றதாக ஸ்டாலின் கூறுவது தவறானது. தமிழக அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஸ்டாலின் செயல்படுகிறார்” என்றார்.

“அக்டோபர், நவம்பரில் காற்றாலை மின் உற்பத்தி குறைவாக இருக்கும் என்பது ஸ்டாலினுக்கு தெரியாதா? மின்சார வாரியம் எந்த தனியார் நிறுவனத்துக்கும் பணம் கொடுக்கவில்லை. 9.17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனியார் அனல் மின் நிலையத்திலிருந்து நிலக்கரியை வாங்கக்கூடிய நிறுவனங்கள்தான் முறைகேட்டில் ஈடுபட்டன, அவற்றைக் கண்டுபிடித்ததே மின்சார வாரியத்தின் ஆடிட்தான். இந்த முறைகேடானது 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்த உடனே மூன்று அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். அந்த 9.17 கோடி ரூபாய் அரசுக்கு வர வேண்டும் என்பதற்காக வட்டியுடன் சேர்த்து 11 கோடி ரூபாய் தரவேண்டும் என அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். அவர்கள் அதற்கு உயர்நீதி மன்றத்தில் தடையாணை பெற்று வந்திருக்கிறார்கள். இந்த வழக்கானது தற்போது நிலுவையில் உள்ளது. இப்படி இருக்கின்ற சூழ்நிலையில் உண்மைத்தன்மை தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் பேசுவது கண்டனத்திற்குரியது” என்றார்.

மின்சார துறையில் ஊழல் நடப்பதாக தொடர்ந்து திமுக குற்றம்சாட்டி வருகிறது, அதற்கு நீங்களும் மறுப்பு தெரிவித்துள்ளீர்கள், இப்படி இருக்கிற சூழலில் நீங்கள் நீதிமன்றத்தை நாடுவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஸ்டாலின் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டால், வேறு வழியில்லை, நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்”என்றவர், தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை எனவும், ஒடிசாவில் பெய்த கனமழை காரணமாக எல்லா மாநிலங்களுக்கும் நிலக்கரி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.