ஸ்டெர்லைட் ஆய்வுக்கு மக்கள் எதிர்ப்பு!

ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் ஸ்டெர்லைட்டில் மேற்கொண்ட ஆய்வு ஒருதலைப்பட்சமானது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர்.
கடந்த மே 22ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்குத் தமிழகமெங்கும் எதிர்ப்பு வலுத்தது. இதன் தொடர்ச்சியாக, மே 28ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தை நாடியது ஸ்டெர்லைட் ஆலையை இயக்கிவந்த வேதாந்தா குழுமம்.
தீர்ப்பாயம் அமைத்த ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவானது, கடந்த 22ஆம் தேதியன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்தது. அதற்கடுத்த நாள், தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக்கில் இக்குழுவினர் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தையும் நடத்தினர். அப்போது, ஸ்டெர்லைட்டை மூட வேண்டுமென்று அதிக அளவிலான மனுக்கள் வந்திருப்பதாகக் கூறினர்.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 27) காலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமென்ற அச்சம் தூத்துக்குடி மக்கள் மத்தியில் எழுந்திருப்பதாகத் தெரிவித்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரினர்.
தூத்துக்குடியில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தின் போது, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டுமென்று சில நபர்கள் மொத்தமாக அளித்த மனுக்களை ஏற்கக் கூடாது என்று நீதிபதி தருண் அகர்வாலிடம் தாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறினார் வழக்கறிஞர் சுரேஷ். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சுமார் 45,000 பேர் மனுக்கள் அளித்ததாகக் கூறப்படுவது மோசடி என்றும் தெரிவித்தார்.
“ஆய்வுக் குழு வருவதற்கு முந்திய நாள் வரை, எப்போது குழு வருகிறது என்று தெரியவில்லை என்றே தூத்துக்குடி ஆட்சியர் பேட்டியளித்து வந்தார். ஆனால், அதற்கடுத்த நாளே மக்களிடம் மனுக்களைப் பெறுகிறோம் என்று ஆய்வுக்குழு கூறியது செய்திகளாக வருகிறது. அப்படியிருந்தும், ஸ்டெர்லைட் மீண்டும் வரக்கூடாது என்று, தனிப்பட்ட முறையில் ஆயிரக்கணக்கில் மக்கள் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆய்வுக்குழு முன்பாகத் தமிழக அரசு எப்படி ஆவணங்களைச் சமர்ப்பிக்கப் போகிறது? எவ்வாறு தேசியப் பசுமைத் தீர்ப்பாய வழக்கை நடத்தப் போகிறது என்பது தான் தற்போதைய பிரச்சினை. 2012 முதல் 2018 வரைக்குமான, ஸ்டெர்லைட்டினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுகாதாரச் சீர்கேடு குறித்த ஆய்வுகளை நடத்தி அறிக்கைகளைத் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். அப்படி எந்த நடவடிக்கைகளையும் எடுக்காததாலேயே, இந்த ஆய்வுக்குழுவை அமைத்து ஒருபக்கச் சார்பாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது பசுமைத் தீர்ப்பாயம்” என்று கூறினார். 1997 முதல் 2012 வரை ஸ்டெர்லைட்டினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்காக, உச்ச நீதிமன்றம் ஆலை நிர்வாகத்துக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததையும் குறிப்பிட்டார்.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க, தீர்ப்பாயம் அனுமதி தந்துவிடுமோ என்ற பயம் மக்கள் மத்தியில் தற்போது நிலவுவதாகத் தெரிவித்தனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.