ஹெச் 4 விசாவுக்குக் கெடு !

ஹெச்-4 விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு உரிமை 3 மாதத்துக்குள் நீக்கப்படும் என்று ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஃபெடரல் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஹெச்-4 என்பது, வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறி ஹெச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவதாகும். இந்த நிலையில் அமெரிக்க அரசு இவ்வாறு தெரிவித்திருப்பது, இந்திய மக்கள் மத்தியில் இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால், இந்தியாவிலிருந்து கணிணி துறை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்காக அமெரிக்கா சென்ற இந்தியர்களின் மனைவிகள்தான் இந்த ஹெச்-4 விசாவால் பயன்பெற்றுவருபவர்கள். ஹெ-4 விசாவால் பயனடைபவர்களில் 93 சதவிகிதத்தினர் இந்தியர்கள். மீதம் உள்ள 7 சதவிகிதத்தில் 5 சதவிகிதத்தினர் சீனர்கள். வெறும் 3 சதவிகிதத்தினர் மட்டுமே பிற நாடுகளை சேர்ந்தவர்கள். அதிலும் இந்த ஹெச்-4 விசா மூலம் பயன்பெறுபவர்களில் கணிசமானோர் இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் தான். எனவே அமெரிக்க அரசின் புதிய நடவடிக்கையால், இந்தியர்கள்தான் அதிகமான பாதிப்புகளுக்கு ஆட்படுவார்கள்.
இந்த நடவடிக்கை ஏற்கனவே எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். இருப்பினும் இதற்கான எதிர்ப்புகள் தொடர்ந்து வந்ததால், இது நடைமுறைப்படுத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்துவந்தது. இந்நிலையில்தான், அமெரிக்க அரசு நீதிமன்றத்தில் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது. அதன்படி, ”ஹெச்-4 விசா மூலம் வேலை வாய்ப்பு பெறுவதை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து வித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இது குறித்தான ஆணை இன்னும் 3 மாதத்தில் சமர்பிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஹெச்-1 பி விசாவை பொறுத்தவரை, ஏற்கனவே அதன் விதிமுறைகளை மாற்றியமைப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இந்த விசாவை பயன்படுத்திப் பல நிறுவனங்கள் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பைப் திருடுவதாக அமெரிக்க அரசு தரப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, ஹெச்-4 விசாவுக்கான புதிய நடைமுறையைப் பற்றி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்தப்போகும் பாதிப்பை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.