இமயமலையில் பசுமை வழிச் சாலை குழு!

சேலம் - சென்னை எட்டு வழிச் சாலையை மையமாகக்கொண்டு உருவாகும் பசுமை வழிச் சாலை என்னும் படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் கிஷோர்.
சேலம் - சென்னை இடையே எட்டு வழிச் சாலை அமைப்பது என அரசால்
முடிவெடுக்கப்பட்டு அதற்கு எதிராக அப்பகுதி மக்கள் திரளவே தற்போது தடை, போராட்டம், வழக்கு, வாய்தா எனப் போய்கொண்டிருக்கிறது அந்த விவகாரம். சமகால பிரச்சினைகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தப் பிரச்சினையையும் கையில் எடுத்துள்ளனர் சினிமாத் துறையினர்.
அதன்படி பசுமை வழிச் சாலை என்னும் படம் தயாராகி வருகிறது. இதில் நடிகர் கிஷோர் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடன் நடிகர் பசுபதியும் நடிக்கிறார். சில படங்களில் கதாநாயகர்களாக நடித்தபோதும் பெரிதாக வரவேற்பைப் பெறாதவைதான் இவ்விருவரின் படங்கள். ஆனால், தாங்கள் ஏற்கும் ரோல்களை கனகச்சிதமாக செய்துமுடிப்பவர்கள் இவ்விருவர் என்னும் நற்பெயர் ரசிகர்கள் மத்தியில் இன்னும் இருந்து வருகிறது. எனவே கிஷோர், பசுபதி கூட்டணியில் வரும் இந்தப் படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 'ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017' என்ற படத்தை இயக்கும் சந்தோஷ் கோபால்தான் இதையும் இயக்கவுள்ளார். பசுமை வழிச் சாலை படத்துக்காகப் படக்குழுவினர் தற்போது இமயமலைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இதை சத்வா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

No comments

Powered by Blogger.