விஜயகுமார்: மகள் மீது புகார்!

தமது வீட்டில் இருந்து காலி செய்யாமல் சொந்தம் கொண்டாடுவதாக மகள் மீது நடிகர் விஜயகுமார் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளாவுக்கு சொந்தமான வீடு மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர், 19வது தெருவில் உள்ளது. அதை நடிகர் விஜயகுமார், தன்னுடைய இரண்டாவது மகள் ப்ரீத்திக்கும் மூன்றாவது மகள் நடிகை ஸ்ரீதேவிக்கும் லீசுக்கு கொடுத்துள்ளார். ஆனால், மூத்த மகள் நடிகை வனிதாவுக்கு கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சில நாள்களுக்கு முன் அந்த வீட்டில் ஷூட்டிங் நடத்தப்போவதாகக் கூறி நடிகை வனிதா அங்கு வந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த பின்பு வீட்டை காலி செய்து தருமாறு, விஜயகுமார் வனிதாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கேட்க மறுத்த நிலையில், சட்டப்படி மனுவும் அளித்துள்ளார். இருப்பினும், எந்த விதத்திலும் சாதகமான பதிலை வனிதா அளிக்கவில்லை. மேலும், அந்த வீடு தம்முடைய வீடு என்றும், தமக்கும் அதில் பங்குள்ளது எனவே காலி செய்ய முடியாது என்றும் பதிலளித்துள்ளார். வனிதாவின் இந்த பதிலை தொடர்ந்து, தனது மகள் மீது மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் விஜயகுமார்.

அதில், “என்னுடைய மனைவி மஞ்சுளாவுக்குச் சொந்தமான வீடு, மதுரவாயல், அஷ்டலட்சுமி நகரில் உள்ளது. அந்த வீட்டை லீசுக்கு கொடுத்துள்ளேன். வீட்டுக்குள் நுழைந்த வனிதா, அங்கிருந்து வெளியில் செல்ல மறுக்கிறார். எனவே, அந்த வீட்டை அவரிடமிருந்து மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, நடிகர் விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் மனு ஏற்பு சான்றிதழை போலீசார் கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே இருவருக்கும் இடையே பல வருடங்களாகவே பிரச்சனை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.