சாதியை மறக்கும் நேரத்தில் அதைப்பற்றி பேசக் கூடாது!

சாதியை மறக்கும் நேரத்தில் அதைப்பற்றி பேசக் கூடாது என்று மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்
கமல்ஹாசன், திருப்பூர், தாராபுரம், காங்கேயம், பல்லடம், பொன்னிவாடி ஆகிய இடங்களில் நேற்று மக்களை சந்தித்தார். மேலும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், மக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.
நிகழ்ச்சி முடிந்த நிலையில் கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். சென்னை விமான நிலையத்தில் இன்று (செப்டம்பர் 21) செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “மக்களுடைய அன்பை பெறுவதற்கு சுற்றுப்பயணம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. நடிகனாக பெற முடியாத அன்பை, சமூக சேவைக்கு வந்ததற்குப் பிறகு சம்பாதித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஒரு வித பணிவு என்னைச் சூழ்ந்துகொள்கிறது” என்று கூறினார்.
கருணாஸ் சர்ச்சை பேச்சு தொடர்பான கேள்விக்கு, “அவர் என்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. சாதிகளை மறக்கும் இந்த நேரத்தில் என்னைப் பொறுத்தவரை அதைப்பற்றி விளையாட்டாகக் கூட பேசக்கூடாது. கருணாஸ் அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது” என்றார்.
கமல் தேர்தல் களத்தை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு, இவர்கள் நடத்துகிற தேர்தலைத்தான் வேடிக்கையாகப் பார்க்க முடியும். சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சித் தேர்தல் என எந்தத் தேர்தலாக இருந்தாலும் ஆயத்தம் இல்லாமல் எதையும் செய்யக்கூடாது. எனவேதான் கட்சியின் பயிலரங்க தேதியை மாற்றியிருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.
“ஊழலை ஒழிப்பதற்கு ஆதாரங்களுடன் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும். ஆனால் ஊழல் செய்பவர்கள் சாதுர்யமாக செய்வதால் ஆதாரங்களை திரட்டுவது கடினமாக உள்ளது. ஊழலை ஒழிக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முயன்று கொண்டே இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பொறுத்தவரை, 13 பேர் துப்பாக்கி குண்டுகள் துளைத்துதான் உயிரிழந்திருக்கின்றனர். அதுபற்றிதான் நாம் கேள்வி கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு தொண்டு நிறுவனங்களுக்குப் ஃபண்டு வந்ததா? செண்டு வந்ததா? என்று கேட்டுக் கொண்டிருக்க முடியாது. குற்றத்திற்கு மன்னிப்பு கோர வேண்டிய நேரத்தில் குற்றத்தை மக்கள் பக்கமே திருப்பக்கூடாது என்று தெரிவித்தார்

No comments

Powered by Blogger.