கருணைக் கொலை: சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனை!

தனது மகனைக் கருணைக் கொலை செய்யக் கோரி கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அச்சிறுவனுக்குச் சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இன்று (செப்டம்பர் 21) மருத்துவப் பரிசோதனை தொடங்கியது.
கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர், வலிப்பு நோய் மற்றும் மூளை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தனது 10 வயது மகனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அடங்கிய அமர்வு, சிறுவனைப் பரிசோதனை செய்வதற்கான மூன்று மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவைப் பரிந்துரைக்க உத்தரவிட்டிருந்தது.
மேலும், கடலூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிறுவனைப் பரிசோதனை செய்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ நிபுணர் குழுவுக்கு நீதிபதிகள் கடந்த 10ஆம் தேதி உத்தரவிட்டனர்.
அதன்படி, சென்னையில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்ட சிறுவனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழு இந்தப் பரிசோதனையை மேற்கொண்டது. சிறுவனுக்கு முழு உடல் பரிசோதனை, இரத்த ஆய்வு மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் நடைபெற இருக்கிறது.
சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா அல்லது இதே நிலையில்தான் இருப்பாரா என்று தெளிவுபடுத்த வேண்டுமென்று மூன்று பேர்கள் கொண்டு மருத்துவக் குழு பரிசோதனை செய்து அடுத்த மாதம் 4ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
Powered by Blogger.