த்ரிஷா: விவகாரமாக மாறிய புகைப்படங்கள்!

நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படங்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
த்ரிஷா துபாயில் உள்ள ரிசார்ட்டில் டால்பினைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கண்டதும் காதல் என்று தலைப்பிட்டு அவர் சில புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது அந்த புகைப்படங்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் த்ரிஷா.
த்ரிஷாவின் புகைப்படங்களை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் கோபம் அடைந்துள்ளனர். பீட்டா விளம்பர தூதுவராக இருந்துகொண்டு டால்பினை கொடுமைப்படுத்தியுள்ளார் த்ரிஷா என்று அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
டால்பின்களை நீச்சல் குளத்தில் அடைத்துவைத்து மனிதர்களுடன் விளையாடச் செய்வது அவற்றைத் தொந்தரவு செய்வதாகும். பணக்காரர்களின் விளையாட்டுக்கு டால்பின்கள்தான் கிடைத்ததா? த்ரிஷா, நீங்கள் எல்லாம் பீட்டா தூதுவர் என்று வெளியே சொல்லாதீர்கள். பணக்காரர்களை மகிழ்விப்பது டால்பினின் வேலை அல்ல என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.
ஹைதராபாத்தில் உள்ள கேரிங் ஹேண்ட்ஸ் ஃபார் அனிமல்ஸ் ஆர்வலர் பத்மஜா, “மனிதர்களுடன் விளையாடுவது டால்பின்களின் வேலை இல்லை. விளையாட அவை ஒன்றும் பொம்மை அல்ல. டால்பின்களைச் சித்ரவதை செய்து தான் தாங்கள் சொல்லியபடி எல்லாம் கேட்க வைக்கிறார்கள். டால்பின்களை மனிதர்களுடன் விளையாடச் சொல்வது கொடுமை. அவை பயத்தால் மனிதர்களுடன் விளையாடுகின்றனவே தவிர அன்பால் அல்ல” என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
டபுள்யூ.டபுள்யூ.எஃப் இந்தியா ஆர்வலரான பரிதா தம்பல் கூறுகையில், “கடலில் வாழும் உயிரினம் டால்பின். பொழுதுபோக்கு பூங்காக்களில் அவைகளுக்கு எப்படி இயற்கையான சூழல் அமையும்? டால்பின்களுக்கு எதற்காக மனிதர்களின் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும்? அவற்றை அவற்றின் மனம் போல வாழ விட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.