ஒரு சிலரின் குள்ளநரித்தனத்தை தோல் உரித்துக் காட்டுவேன்!

ஒரு சிலரின் குள்ள நரித்தனமான செயற்பாட்டினை விரைவில் தோல் உரித்துக்காட்டுவேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் வாக்களித்தது தமக்கு குருவிக் கதையும் கழுதைக் கதையும் பேசுவதற்கு அல்ல, அவர்களின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று கொடுப்பதற்கே என்பதை இவ்வாறான அரசியல் வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களில் முதன் முறையாக சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வதற்கான தடையை ஏறாவூர்பற்றில் இன்று ஏற்படுத்தியிருக்கிறேன்.

அத்துடன் கடந்த காலம் முதல் எந்தெந்த அரசியல்வாதிகளின் சிபாரிசுக் கடிதத்தில் அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது என்பதையும் உரிய திணைக்கள அதிகாரிகளிடம் அறிக்கைகளை கேட்டுள்ளேன்.

அறிக்கை கிடைக்கும் போது தெரியும், மண் மாபியாக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் என்பது. சில மண் மாபியாக்கள் ஒரு சில அரசியல்வாதிகளை வாழ்த்திப் பேசியும், எழுதியும் வருகின்றனர்.

இவர்களுடைய செயற்பாடு எமக்கு பெரிய சந்தேகத்தை எற்படுத்தியுள்ளது. நாங்கள் மக்களுடைய அனைத்துப் போராட்டங்களிலும் ஓடி ஒளியாமல் வெளிப்படையாக நின்று போராடுகின்றோம்.

நாங்கள் மற்றவர்களை போல் குருவி, கழுதைக்கதை கூறித்திரியாமல் எமக்கு வாக்களித்த மக்களுக்கு பிரச்சினை என்று வரும் போது மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடுகின்றோம்.

ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியால் எமது மாவட்டத்திற்கு வரும் அபிவிருத்திகளுக்கு உரிமை கொண்டாடுபவனும் நான் அல்ல.

மக்களின் போராட்டங்களின் போது ஓடி ஒளியும் அரசியல் வாதிகளுக்கு எமது செயற்பாடு பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ளதன் வெளிப்பாடே சிலர் என்னை விமர்சனம் செய்கின்றனர்.

மண் மட்டும் அல்ல மட்டக்களப்பில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட காணி தொடர்பான தகவல்களையும் தகவல் அறியும் சட்டம் மூலம் பெற்றுள்ளளேன். அவற்றையும் விரைவில் வெளிப்படுத்துவேன். அவ்வேளையில் பலருடைய முகத்திரைகள் கிழிக்கப்படும்.

அது மட்டுமல்ல கடந்த காலங்களில் யார் யாருக்கு கொந்துராத்து வேலைகள், யார் யாருடைய சிபாரிசில் வழங்கப்பட்டன இச்செயற்பாட்டில் யார் யார் கையூட்டல்களை பெற்றுள்ளனர். செயற்படுத்தப்பட்ட திட்டங்களில் திருப்தி இல்லாமல் அரச நிதிகள் வீணடிக்கப்பட்ட தகவல்களையும் சேகரித்து வருகின்றேன்.

அத்துடன் சில அரசியல்வாதிகள் மற்றவர்களை குறை கூறி கொண்டு தங்களுடைய உறவுகளுக்குள் பங்கீடு செய்வதும் எங்களுக்கு தெரியும்.

எதிர்வரும் காலங்களில் மற்றவர்களை போல் உள்ளொன்று வெளியொன்று பேசாமல் சரியான தகவல்களை திரட்டி பெயருடன் நேரடியாக வெளிவிடுவேன் என தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.