எமது குரல் ஐ.நா வரை ஒலிக்க வேண்டும்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் சர்வதேச சிறுவர் தினம் ஆகிய இரு தினங்களையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் 01ஆம் திகதி காலை 08.30 மணிக்கு மட்டக்களப்பில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று
முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு இணையம் அரச சார்பற்ற நிறுவனங்களின் மையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் சர்வதேச சிறுவர் தினம் ஆகிய இரு தினங்களையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் 01ஆம் திகதி காலை 08.30 மணிக்கு மட்டக்களப்பு சின்னாஸ்பத்திரி முன்பாகவிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு நகரிலுள்ள காந்தி பூங்காவிற்கு சென்றடைந்து அங்கு எமது எதிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

அந்த வகையில் எமது போராட்டமானது வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு போராட்டமாக அமையவுள்ளது, அதனடிப்படையில் 8 மாவட்டங்களில் இருந்து எமது போராட்டத்திற்கு வழுச்சேர்க்கவுள்ளனர்.

அத்துடன் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்ட தொடரில் இலங்கை ஜனாதிபதி சென்று இலங்கையின் பிரச்சினைகளை உள்ளக பொறிமுறையின் பிரகாரம் விசாரித்து தீர்வு பெறமுடியும் சர்வதேச விசாரணை வேண்டாம் என பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

ஆகையால் அன்று நடைபெறவிருக்கும் போராட்டத்தின் போது எழுப்புகின்ற எமது குரல்கள் ஐ.நா வரை ஒலிக்க வேண்டும்.

அத்துடன் எமது போராட்டத்திற்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர், அதனால் இப்போராட்டம் வெற்றி பெரும் என குறிப்பிட்டு கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த ஊடக சந்திப்பின்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் எஸ்.அரியமலர், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.புவனராஜ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.