விளையாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் த்ரிஷா

த்ரிஷா நடிப்பில் உருவாகும் ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்தாலும் பிரதான வேடம் ஏற்று நடிப்பதையும் தொடர்ந்து வருகிறார் த்ரிஷா. த்ரில்லர் பாணியில் தயாராகும் பரமபதம் விளையாட்டு படத்திலும் அத்தகைய கதாபாத்திரத்திலே நடித்துவருகிறார். சர்வம் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் மருத்துவராக நடிக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் கலந்து கொண்டு நடித்துள்ள இவருக்கு இதில் ஜோடி இல்லை.
திருஞானம் இயக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்காட்டில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காக படக்குழு அங்கே முகாமிட்டுள்ளது. அங்குள்ள ராபர்ட் கிளைவ் பங்களாவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில் நந்திதா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். 24 ஹவர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.
த்ரிஷா, விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 96 திரைப்படத்தின் ட்ரெய்லரும் இசையும் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. முக்கியமாக இசை ரசிகர்களால் அதன் பாடல்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. படம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு மாற்றி மாற்றி பதில் வந்தபோது தற்போது அக்டோபர் 4ஆம் தேதி என உறுதிப்படுத்தியுள்ளனர்.
‘பேட்ட’ படத்தின் மூலமாக முதன்முறையாக ரஜினிகாந்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துவருகிறார். அரவிந்த் சாமிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள சதுரங்கவேட்டை 2 திரைப்படம் பணப்பிரச்சினை காரணமாக வெளியீட்டில் தாமதமாகி வருகிறது.
Powered by Blogger.