விநாயகர் சிலை: நிபந்தனைகளுக்குத் தடை விதிக்க முடியாது!

விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு தொடர்பான தமிழக அரசின் நிபந்தனைகளுக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை அமைத்து வழிபாடு நடத்துவதற்கும், சிலைகளைக் கரைப்பதற்கும் புதிய விதிகளை உருவாக்க, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், “விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தவும், அவற்றைக் கரைப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் தடையில்லாச் சான்று பெற வேண்டும்; இந்த நிகழ்ச்சிக்கு, ஒரு மாதத்திற்கு முன்பே அரசின் அனுமதியைப் பெற வேண்டும்; 10 அடிக்கு மேல் சிலை வைக்கக்கூடாது; மாட்டுவண்டி பயன்படுத்தக் கூடாது;சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்களிடம் அனுமதி பெற வேண்டும்” என்பது உள்ளிட்ட 24 விதிகளை வகுத்து, கடந்த 9 ஆம் தேதியன்று தமிழக அரசு உத்தரவொன்றைப் பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, வழக்கறிஞர் சுடலையாண்டி பொதுநல வழக்கொன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த நிபந்தனைகளை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 5) நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன்பு வந்தது.

அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் நிபந்தனைகளுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

இதற்கிடையே, புதிய விதிகளை எதிர்த்து இந்து முன்னணியைச் சேர்ந்த ராமகோபாலன் உள்ளிட்டோர் தனி நீதிபதி மகாதேவன் முன்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி மகாதேவன், இரண்டு நீதிபதிகளின் உத்தரவு விவரங்களைப் பார்த்தபின்பு நாளை (செப்டம்பர் 6) இந்த வழக்கில் உத்தரவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.