மஹிந்தவுடன் உள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் உள்ளவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள் என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

 “முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சுற்றியுள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள். ஒவ்வொரு நேரத்திற்கும் நிறத்தை மாற்றும், குணாதிசயங்களை மாற்றும், கூறுகின்ற கருத்தை மாற்றி பேசுகின்றவர்கள் தான் அவருடன் உள்ளனர்.

அன்று நாட்டின் பொருளாதாரத்தை கொலைசெய்து பாதாளத்திற்கு தள்ளியவர்கள், 10 வருட காலமாக மக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு வரிவித்தவர்கள் இன்று அதிகாரத்தை கோருகின்றனர்.

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் உள்ளதைவிட இப்போது பொருட்களின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது. பால்மா தொடக்கம் பருப்பு வரை சகல விடயங்களுக்கும் வரி விதித்தார்கள்.

அதிகாரத்தில் இருக்கும் போது எதனையும் செய்ய முடியாதவர்கள் இன்று அதிகாரத்தைப் பற்றி கதைக்கின்றனர். பௌர்ணமிக்குள் ஆட்சியை கைப்பற்றுவதாக குறிப்பிட்டனர். பின்னர் உள்ளூராட்சி தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதாக குறிப்பிட்டனர்.

இதனை முடிக்காதவர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்தனர். இறுதியாக ஜனபலய என்று போராட்டமொன்றை நடத்தினர். எதுவுமே சாதகமாக அமையவில்லை. அவர்கள் ஆட்சிபீடம் ஏறுவது வெறும் கனவே” என குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.