விநாயகர் சிலைகள் கரைப்பு: இருவர் உயிரிழப்பு!

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் இன்று (செப்டம்பர் 16) கடலில் கரைக்கப்பட்டன. இதில், நெய்வேலி அருகே விநாயகர் சிலையைக் குளத்தில் கரைக்கும்போது நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
கடலில் விநாயகர் சிலை கரைப்பு
கடந்த 13ஆம் தேதியன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. பல்வேறு விதமாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளைப் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டு, அன்றே சில இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்டன.
சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துவந்து இன்று முதல் கடலில் கரைக்கப்படுகின்றன. சென்னையில் எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு, பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சிலைகளைக் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் காலை முதல் விநாயகர் சிலைகள் போலீஸார் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை பட்டினப்பாக்கத்தில் பெரிய சிலைகள் அனைத்தும் கிரேன் மூலம் கடலில் கரைக்கப்படுகின்றன. இதற்காக 2 கிரேன்கள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளன. விநாயகர் சிலை ஊர்வலம் நடப்பதால், சுமார் 20,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படக் கூடாது என்பதற்காக உள்ளூர் மீனவர்கள் படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும் சென்னையில் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து சென்றதால், நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருச்சியின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட 267 விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சிந்தாமணி அருகே காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. மேலும் ஸ்ரீவில்லிபுதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 31 விநாயகர் சிலைகளை, எடுத்து வந்த பக்தர்கள் திருவண்ணாமலை கோனேரிகுளத்தில் கரைத்தனர்.
இதேபோல், தமிழகத்தின் தஞ்சாவூர், மதுரை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. இதனால் அந்தந்த மாவட்ட போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிலை கரைக்கும்போது இரு சிறுவர்கள் பலி
இந்த வருடம் கடலில் நேரடியாகச் சிலைகளை கரைக்கப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் நெய்வேலி அருகே விநாயகர் சிலையைக் குளத்தில் கரைக்கும்போது நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த கைகளக்குப்பம் என்ற இடத்தில், அப்பகுதி கிராம மக்கள் நேற்று விநாயகர் சிலைகளைக் குளத்தில் கரைத்தனர். சிலையைக் கரைக்கும்போது, குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்ற மணிகண்டன் மற்றும் அஜித் குமார் என்ற இரண்டு சிறுவர்கள் சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தனர்.

No comments

Powered by Blogger.