ஆதி சிவனை நெருங்கினால் சட்டம் பக்தர்களின் மீது பாயும்!

வவுனியா, வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஆலயத்தில் இருந்து 400 மீற்றர் தூரத்தில் இருந்தே வழிபடவேண்டும், அதை மீறினால் சட்டம் பக்தர்கள் மீது பாயும் என்று எச்சரித்துள்ளனர் நெடுங்கேணிப் பொலிஸார்.

எனினும் எந்தத் தடை வரினும் சிவனுக்குப் பொங்கல் விழாவைச் சிறப்புற நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஆலய நிர்வாகம் தெரிவிக்கின்றது.

வவுனியாவில் எல்லைக் கிராமமான ஒலுமடுவில் உள்ளது வெடுக்குநாறி மலை, அங்கு ஆதிசிவன் ஆலயத்தை அமைத்து தமிழர்கள் காலாதிகாலமாக பூசை வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

அண்மைக் காலமாக அந்த ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்படுகிறன. வரலாற்று இடம் என்பதால் அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடாது என்று தொல்பொருள் திணைக்களம் கூறுகின்றது.

அதனடிப்படையில் பொலிஸாரும் வழிபாட்டில் ஈடுபடும் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கின்றனர். இந்தச் சம்வங்களைக் கண்டித்து வவுனியா நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பாரம்பரியமாக வழிபபட்ட இடங்களை அரச திணைக்கங்கள் கையகப்படுத்துவதென்பது திட்டமிட்ட மத ஒடுக்குமுறை என்றும், இது நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. அதன் பின்னர் ஆலய நிர்வாகத்தினர் வெடுக்குநாறி ஆதிசிவனை வழிபட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் விழா நாளை 7ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். ஆலயத்தில் ஒலிபெருக்கியை பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கு நிர்வாகத்தினர் நெடுங்கேணிப் பொலிஸ் நிலையத்துக்கு நேற்றுச் சென்றனர். எனினும் பொலிஸாரோ அனுமதியை வழங்கவில்லை.

ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்திலிருந்து 400 மீற்றர் தூரத்தில் நின்று வழிபடுமாறு தொல்பொருள் திணைக்களம் கட்டுப்பாடு விதித்துள்ளது. எனவே அதற்கான அனுமதியை வழங்க முடியாது என்று தெரிவித்த பொலிஸார் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டை மீறி பூசைகள் நடைபெற்றால் சட்டம் பாயும் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

எந்தத் தடைகள் வரினும் ஏற்படுகள் மேற்கொள்ளப்பட்டதற்கு அமைய நாளை ஆதி சிவனில் பொங்கல் விழா சிறப்பாக இடம்பெறும் என்று ஆலயத்தின் நிர்வாகத்தினர் மற்றும் பூசகர் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸாருடனான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.