விஜயகலாவின் எம்.பி பதவி நிலை??

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில், நாடாளுமன்றத்துக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய வழங்கிய வாக்குறுதிக்கு என்ன நடந்ததென, விமல் வீரவன்ச எம்.பியால், நாடாளுமன்றத்தில் நேற்று (18) கேள்வி எழுப்பப்பட்டது.

“சபாநாயகர் அவர்களே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டமை தொடர்பான சட்ட மா அதிபரின் அறிவுறுத்தல், உங்களுக்கு வழங்கப்படுமென, நீங்கள் இந்தச் சபையில் தெரிவித்திருந்தீர்கள். அவ்வாறு கூறி, எத்தனையோ வாரங்கள் கடந்து விட்டன. இதுவரை சட்டமா அதிபரின் அறிக்கை உங்களுக்குக் கிடைக்கவில்லையா” எனக் கேட்டார்.

அவ்வாறு சட்ட மா அதிபரின் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாயின், அது எவ்வாறான அறிவுறுத்தலாகும் என்பதையும், வழங்கப்படவில்லையாயின் அந்த அறிவுறுத்தலை எப்போது பெற்றுக்கொள்ளப் போகிறார் என்றும், விமல் எம்.பி, தொடர்ந்து கேட்டார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், அதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக, சட்டமா அதிபர் தனக்கு அறிவித்துள்ளாரெனவும், விஜயகலா மகேஸ்வரன் மீது வழக்குத் தொடரத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“விஜயகலாவின் கருத்து, அரசமைப்பை மீறியுள்ளதா என்பது குறித்து, சட்டமா அதிபர் ஊடாக அறிந்துக்கொண்டு, விஜயகலாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தீர்கள். அதை விடுத்து, பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு, பொய் வழக்குகளை முன்னெடுப்பது குறித்து நான் கேட்கவில்லை. அரசமைப்பைப் பாதுகாப்பது குறித்து, இந்தச் சபையில் நாம் சத்திய பிரமாணம் செய்துள்ளோம். அந்த சத்தியப் பிரமாணத்தை, விஜயகலா மீறியுள்ளார்” என, விமல் வீரவன்ச மேலும் கூறினார்.

#vijayakala 

No comments

Powered by Blogger.