தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அதிகாரத்தை பயன்படுத்துங்கள்!

நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே உண்டு. எனவே, தனது அதிகாரத்தை பயன்படுத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. இதன்போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மணிக்கூடு கோபுரத்திற்கு அருகிலிருந்து பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், அதனைத் தொடர்ந்து காந்திபூங்கா முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, ‘இனத்துக்காக போராடியவர்கள் குற்றவாளிகளா?’, ‘நல்லாட்சி அரசே அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்’, ‘பொதுமன்னிப்பு வழங்குவதில் காலதாமதம் ஏன்?’ போன்ற வாசங்கள் அடங்கிய பதாதைகளுடன் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பிரதேச சபையின் தவிசாளர்கள், பிரதேச சபை, மாநகரசபை உறுப்பினர்கள், இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பெருந்திரலானோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.