நெல்லை போலீஸிடமிருந்து தப்பிய கருணாஸ்!

கருணாஸுக்கு முன் ஜாமீன் : பூலித்தேவன் நினைவிடத்தில் நடந்த மோதல் தொடர்பான வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த மாதம் 16-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரியை கருணாஸ் கடுமையாக விமர்சனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கருணாஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட கருணாஸ், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனிடையே சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிகளின் போது ரசிகர்களை கருணாஸ் தாக்கியதாக கருணாஸ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த இரு வழக்குகளில் இருந்தும் ஜாமீன் கிடைத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த அக்.2ம் தேதி இரவு, புளியங்குடி டிஎஸ்பி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு சென்றனர். ஆனால், அவர் வீட்டில் இல்லாததால் திரும்பிச் சென்றுவிட்டனர்.

மறுநாள் காலை, கருணாஸ் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் தான் தெரிந்தது, கருணாஸை கைது செய்ய நெல்லை போலீசார்கள் சென்றார்கள் என்று. அதாவது, கடந்த 2017ம் ஆண்டு, திருநெல்வேலியில் உள்ள நெற்கட்டும் செவலில் பூலித்தேவன் நினைவிடத்தில் கருணாஸ் மரியாதை செலுத்த சென்றபோது மற்றொரு தரப்புடன் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக புளியங்குடி போலீசார் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். அது தொடர்பான வழக்குகளில் தான் கருணாஸை கைது செய்ய போலீசார் வந்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கருணாஸ் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முன்ஜாமீன் மனு மீதான விசாரணை முடியும் வரை கருணாசை போலீசார் கைது செய்ய மாட்டார்கள் எனக் கூறிய நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் கருணாஸ் முன்ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கருணாசுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

2017ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கருணாசை காவல்துறை இப்போது கைது செய்ய முயற்சிப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கில் போலீசார் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளிப்பதாக கூறினார். 

No comments

Powered by Blogger.