ஊடகவியலாளர் எக்னொலிகொட விசாரணைகள் மூடி மறைக்கப்படுகின்றனவா?

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள், அதிகாரம் படைத்த இராணுவ அதிகாரிகளினால் மூடி மறைக்கப்படுவதாக, மனைவி சந்தியா எக்னெலிகொட சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

மல்வத்தை மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை இன்று (புதன்கிழமை) சந்தித்து ஆசி பெற்ற அவர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”என் கணவரை கடத்தி காணாமலாக்கியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இது தொடர்பாக இராணுவம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. ஆனால், இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளினால் மறைக்கடிக்கப்படும் நிலை காணப்படுகிறது. எனவேதான் விசாரணை அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியிடப்படாமல் உள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இராணுவத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளது.

எனக்கு நேர்ந்துள்ள துரோகம் குறித்து ஜனாதிபதியிடம் அறிவிப்பதற்காக அவரை சந்திப்பதற்கு முயற்சித்த போதிலும் அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.

இது தொடர்பாக காணாமல் போனோர் அலுவலகம் சார்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது ஒரு அலுவலகம் மாத்திரமே. அவ் அலுவலகத்தினால் தீர்வு சாத்தியமற்றது” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.