ஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்!

தூரத்தில் இரண்டு மனித உருவம் தென்படுகிறது. இது யாராக இருக்கும் எனப் பார்தவருக்குள் ஓர் ஐயப்பாடு. கொஞ்சம் நகர்ந்து முன்னோக்கிச் செல்கிறார். அங்கு நிற்பவர்கள் இருவரும் ஆண்கள்தான் எனப்பதை ஊர்ஜிதம் செய்கிறார். அப்பாட! அவர்களுக்குள் தப்பேதும் நடக்காது என்ற தீர்க்கமான நம்பிக்கையோடுத் திரும்பிச் செல்கிறார்.

அந்த நம்பிக்கை கடந்த ஒரு சில நாள்களுக்கு முன்புவரை அவருக்குக் கைகொடுத்தது. ஆனால் இனி அப்படியல்ல. இரண்டு ஆண்கள் ஓர் இடத்தில் நின்றால் கூட ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தனியாக நிற்பதைப் பார்த்து சந்தேகப்படுவதை விட அதிகமாகச் சந்தேகப்படவேண்டியுள்ளது. ஏனென்றால் அவர்களுக்குள்ளும் “அது…”, “இது…”, “எது…” வேண்டுமானாலும் நடத்துவதற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அந்த அங்கீகாரம்தான் இதுவரை ஓரினச் சேர்க்கை என அழைக்கப்பட்டு வந்த ஓர் ஆணும் மற்றொரு ஆணும் அல்லது ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் பாலியல் ரீதியிலான உடலுறவு. தற்போது அந்தச் சொல்கூட மெருகேற்றப்பட்டு “தன்பாலின உறவு” என மரபு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரமானது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம், சிலருக்கு மகிழ்ச்சியை வரவழைத்திருக்கலாம். ஊடகவியலாளர்களுக்கு விவாதக் களத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். ஆனால் இவர்களெல்லாம் ஒரு விஷயத்தை மிகத்திடமாக மனதில் கொள்ள வேண்டும். இவ்வுலகானது இயற்கையை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிடக் கூடாது.

“தன்பாலின உறவுக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பதற்கு முன்பு, அதனை மிக முக்கியமான மூன்று காரணிகளை மையப்படுத்தி அலசி ஆராய்து அங்கீகரித்திருக்க வேண்டும்” எனத் தன் கருத்தை முன் வைக்கிறார் ஒரு மருத்துவர்! அது எவை என அவரிடம் தொடர்ந்த வினாவிற்கு, அவர் முன்வைத்த விடை இதுவாக இருந்தது.

“ஒரே பாலினத்தைச் சார்ந்த இருவருக்கு, பாலியல் உறவு கொள்வதற்கான சட்ட அங்கீகாரம் கொடுப்பதற்கு முன், அவர்களின் உடலியல், உளவியல், சமூகவியல் பாதிப்புகளை மிகத் துல்லியமாக ஆய்ந்தறிந்த பின்னரே இவ்வங்கீகாரம் அளித்திருக்க வேண்டும்” என்கிறார் அந்த மருந்தியலாளர்.

முதலில் அவர் முன் வைத்த காரணியானது, உடலியல் ரீதியிலானது. “ஓர் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதாக இருந்தால், அதற்கென்றே இயற்கையாகவே இருவருக்கும் உடல்கூறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த முறையில் அவர்கள் உறவு கொள்வதாக இருந்தால், அவர்களுக்கு உடல் ரீதியிலான எவ்விதப் பிரச்னைகளும் எழுவதற்கான வாய்ப்புகளில்லை. அதோடு அவர்களை எவ்வித நோய்களும் அண்டுவதற்கும் வழியில்லை” என்பதாகும்.

இயல்பான, இயற்கையான நடைமுறைகளைத் தவிர்த்து அவர்கள் மேற்கொள்ளும் செயற்கையான உறவு முறையானது, ஒருவர் தனக்கு வாயிருந்தும் மலதூரம் வழியாக உணவருந்துவதற்கும், மலத்தூரம் இருந்தும் வாய்வழியே மலம், சிறுநீர் கழிப்பதற்கும் சமமானதாகும். இவ்வாறு செய்வதின் மூலம் அவர் என்னென்ன சிரமங்களையும் நோய்களையும் அனுபவிப்பாரோ அவை அனைத்தையும் இதன் மூலம் அவர் அனுபவிக்க வேண்டியிருக்கும்” என விளக்கினார்.

இரண்டாவதாக அவர்கள் முன்வைத்தக் காரணம் உளவியல் ரீதியிலானது. “இருவர் இணைந்து இன்பம் துய்த்தல் போன்றக் காரியத்தில் ஈடுபடும் போது அதில் அவர்கள் இருவருக்கும் ஒன்று போல் இன்பம் கிடைக்க வேண்டும். என்றால் மட்டுமே அவர்கள் இருவரும் அந்த விஷயத்தில் முழுத் திருப்தியடைவார்கள். ஆனால் இவ்விதமான தன்பாலின உறவில் ஈடுபடுபவர்களுக்கு நிச்சயமாக, அவ்வாறான முழுத் திருப்திக் கிடைக்காது என்பது உளவியல் ரீதியிலான உண்மை.

அப்படி இயற்கைக்கு மாறான உறவில் திருப்திக் கிடைக்காமல் போனால், அவர்களுக்குள் ஒரு முரட்டுத்தனமும் வெறித்தனமும் இயல்பாகவே தோன்றிவிடும். அது அவர்களிடமிருக்கும் மனிதத்தன்மையை மாற்றி மிருக நிலைக்குக் கொண்டு செல்லும். அதோடு அவர்களின் மனநிலையும் நிச்சயமாகப் பாதிக்கப்படும்.

அதன் பிறகு அவர்களால் இயல்பான மனநிலையில் இயங்குவதற்கு இயலாமல் போகும். சதாநேரமும் அது பற்றிய கவலையில் முழ்கிவிடுவார்கள். அதோடு அவர்களுக்கு வாழ்க்கையில் ஒருவித விரக்தி ஏற்பட்டுத் தற்கொலை முயற்சிக்கே தங்களை ஆளாக்கிக் கொள்வார்கள்” எனக்கூறினார்.

மூன்றாவதாக அந்த மருந்தியலாளர் முன் வைத்த விளக்கமானது சமூகவியல் பாதிப்புகள் பற்றியதாகும். “ஓர் ஆணும் பெண்ணும் ஒருவேளைத் தப்பித் தவறி, தங்களுக்குள் கள்ளத்தனமானத் தொடர்பை வைத்திருந்தால் கூட இச் சமுதாயமானது எவ்வளவு பெரிய குற்ற உணர்வோடு அதை பார்க்கின்றது.
அப்படியென்றால், ஓர் ஆணும் ஆணும் அல்லது ஒரு பெண்ணும் பெண்ணும் தங்களுக்குள் இதுபோன்ற ஓர் உறவு வைத்திருப்பதை அறிந்தால் இச்சமூகம் அவர்களை எந்த அளவிற்கு அங்கீகரிக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

அவர்களைப் பெரும் குற்றவாளிகளாக்கி இழித்துரைப்பதும், பழித்துப் பேசுவதும் இச் சமூகத்தின் வாடிக்கையாகி விடும். மட்டுமின்றி அவர்களின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகும். அவர்களுக்கு சந்தானங்கள் இல்லாமல் போகும். சொத்துரிமைகளை கூட இழந்து விடுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக, ஒட்டுமொத்தச் சமூகமும் அவர்களை ஒதுக்கியே வைத்து விடும். மட்டுமின்றி சொந்த வீட்டாரும் உறவினர்களும் கூட இவர்களை அங்கீகரிப்பதற்கு மறுத்து, ஒதுக்கி ஓரம் கட்டியே வைத்துவிடுவார்கள் காலப்போக்கில் இவர்கள் யாருக்கும் வேண்டாதச் செல்லாக் காசாகி விடுவார்கள்” என்று கூறினார்.

இந்த மருத்துவயிலார் கூறும் காரணங்கள் அனைத்திற்கும் நமது தமிழகத்தில் சான்றுகள் உண்டு. தன்பாலினச் செயற்கையினால் தங்களுக்கு முழுத்திருப்தி கிடைக்காமல் போனால் அவர்களுக்குள் ஒரு முரட்டுத்தனமும் வெறித்தனமும் இயல்பாகவே தோன்றிவிடும். அது அவர்களிடமிருக்கும் மனிதத்தன்மையை அழித்து கொடூரமானக் கொலை வெறிக்குக் கூட ஆளாக்கி விடும் என்பதற்குச் சான்றுதான் 1996 ஆம் ஆண்டு, சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படித்து வந்த சீனியர் மாணவன், தனது ஜூனியர் மாணவனை தனது தன்பாலின இச்சைக்கு ஆள்படுத்தி அதில் தன் காம இச்சை அடங்காததினால், கண்டம் துண்டமாக வெட்டித் தூக்கி வீசியதாக அறியப்பட்ட வழக்கு! அந்த நிகழ்வு, இன்றும் தமிழக மக்கள் கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

இந்தச் சட்ட அங்கீகாரத்தினால் இனி, உயர் கல்வி நிலையங்களில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர் மிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இல்லையேல் அதுவே தற்போது விடுதிகளில் தங்கிப் படிக்கும் இன்னும் பல அப்பாவிகளுக்கு நடப்பதற்கு வாய்ப்புண்டு. இதுவரை விடுதிகளில் அதிகம் வெளிச்சத்திற்கு வராமல் இலைமறைக்காயாக நடந்து வந்த இந்தத் தன்பாலின உறவு, இனி பகிரங்கமாக நடக்கும் என்பதில் எங்விதச் சந்தேகமும் இல்லை. அப்படி நடந்தால் அதைத் தட்டிக் கேட்பதற்கு நாதியற்றுப் போகும்.

மனிதன் தன் எல்லாச் செயல்களிலும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால், அவனை எவ்வித இன்னல்களும் அண்டாது. நோய்நொடிகளும் நெருங்காது. இயற்கையை மீறி நடக்கும் எந்தச் செயலானாலும் அது அவனுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் ஆபத்தை விளைவிக்கத்தான் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

அவ்வகையில் இயற்கையும் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு செயலையும் சட்டம் போட்டு ஏற்றுக் கொள்ள வைப்பது, எவ்வகையிலும் நியாயமானதன்று.

(கட்டுரையாளர், முனைவர் கமல. செல்வராஜ் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர்! கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர்! அணுக: drkamalaru@gmail.com)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.