புலியைத் தத்தெடுத்த ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’!

வண்டலூர் உயிரியியல் பூங்காவில் வெள்ளைப் புலி ஒன்றைத் தத்தெடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

பொன்ராம் இயக்கத்தில் தான் நடித்திருந்த சீமராஜா படம் முன்னதாக வெளியான நிலையில் மோதி விளையாடு பாப்பா எனும் விழிப்புணர்வு குறும்படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இதையடுத்து தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாக இயங்கி வரும் அவர் நேற்று (அக்டோபர் 9) வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் வெள்ளைப் புலி ஒன்றைத் தத்தெடுத்துள்ளார்.

அனு எனும் பெயர்கொண்ட இந்த வெள்ளைப்புலியைத் தத்தெடுத்துள்ள அவர் இந்த புலிக்கான அன்றாட உணவுகளை ஆறு மாத காலம் வரை வழங்குவது என ஒப்பந்தம் செய்துள்ளார். டெல்லியில் வசித்துவந்த அனு 2006ஆம் ஆண்டு வண்டலூருக்கு அழைத்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வண்டலூரில் புலி மற்றும் சிங்கத்திற்கு ஒருநாள் உணவுக்கு ஆகும் செலவு ரூ.1196 எனவும் யானைக்கு 600 முதல் 700 ரூபாய் வரை செலவாகும் எனவும் அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது. புலியைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன் “அருகிவரும் உயிரினங்களில் ஏதேனும் ஒன்றை இதுபோல தத்தெடுக்க அனைவரும் முன்வரவேண்டும்” என வேண்டுகோள் வைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.