திருநங்கை அழகி 2018 நபிஷா

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் திருநங்கைகளுக்கான 2018ஆம் ஆண்டிற்கான அழகிப் போட்டி நேற்று (அக்டோபர் 9) நடைபெற்றது. இந்த போட்டியில், சென்னை, ஓசூர், கிருஷ்ணகிரி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும், கோவாவில் இருந்தும் திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

இந்த அழகிப்போட்டியில் நடிகர் நகுல், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். அழகிப் போட்டி தொடங்கியதும், முதலில் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பட்டுப் புடவைகள், நகைகளுடன் காட்சியளித்தனர் திருநங்கைகள். அதனைத் தொடர்ந்து, விதவிதமான உடைகளில் கேட் வாக் செய்தனர். சிலர் பரதநாட்டியம் ஆடியும், அம்மன் வேடம் தரித்தும் மேடையை அலங்கரித்தனர். பல்வேறு கட்டமாக நடந்த இந்த போட்டியின் முடிவில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நபிஷா 2018ஆம் ஆண்டிற்கான அழகியாக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு நடிகர் நகுல் கிரீடம் அணிவித்து, கேடயம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினார். இது, தனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்று நபிஷா பெருமிதத்தோடு கூறினார். “நான் முதல்முறை இது போன்ற அழகிப் போட்டியில் கலந்துகொண்டுள்ளேன். நான் வாங்கிய பரிசுப் பொருளை வைத்து திருநங்கைகளுக்கான பரதநாட்டிய இன்ஸ்டியூட் ஆரம்பிக்கப் போகிறேன். என்னுடைய அம்மா, அப்பாவைப் பார்த்து ஏழு வருஷமாகி விட்டது. இந்த செய்தியைப் பார்த்து, பெற்றோர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்” என்று உணர்ச்சிகரமாகப் பேசினார் நபிஷா.

இதனைத்தொடர்ந்து பேசிய நகுல், “இந்த நிகழ்வு என்னை உணர்வுப்பூர்வமாக ஆழ்த்தியது. சமூகத்தில் திருநங்கைகள் ஒரு அங்கத்தினர் என்பதை கருத்தில்கொண்டு, அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

திருநங்கைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, மூன்றாவது ஆண்டாக இந்த போட்டி நடத்தப்படுவதாகக் கூறினார் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திருநங்கை சுவேதா. “கல்வி, தொழில் என அனைத்துத் துறைகளிலும் திருநங்கைகளை மேம்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும்” எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.