இளைய தலைமுறையின் மனநலம் காப்போம்!

மாற்றங்களுக்கு உள்ளாவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் இந்த உலகில், இளைய தலைமுறையினர் மனநல ஆரோக்கியத்தோடு வாழ்வது மிக முக்கியம். வாழ்நாள் முழுவதும் நலமுடன் திகழ, நல்ல மனநலத்தோடு
இருக்க வேண்டும். மாறாக, இன்றைய இளைய தலைமுறையானது பல்வேறு விதமான அதிர்ச்சிகள், மூன்றாம் பாலின வேறுபாடுகள், மனநலக் குறைபாடுகள், தற்கொலை எண்ணம் உட்படப் பல்வேறு விஷயங்களால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதிலிருந்து இவர்களை விடுவித்து, அடுத்துவரும் தலைமுறையைக் காக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டோரின் மனநலத்தைக் காக்க வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது ஐக்கிய நாடுகள் சபை. அந்த வகையிலேயே, இன்று (அக்டோபர் 10) உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது.
15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளைய தலைமுறையினரின் மரணங்களுக்கு இரண்டாவது முக்கியக் காரணமாக இருப்பது தற்கொலைகள். உலக அளவில், இளைஞர்களில் ஐந்தில் ஒருவர் மனநல பாதிப்புக்கு ஆளாகிறார் என்கிறது ஒரு ஆய்வு. இது உலக மக்கள் தொகையில் 20 சதவிகிதம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டில் சுகாதாரத்துக்காக ஒதுக்கப்படும் நிதியில் சுமார் 4 சதவிகிதம் மட்டுமே மனநலக் குறைபாடுகளைத் தீர்க்கப் பயன்படுத்தப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் குழந்தைகளுக்கான நிதியமானது, இந்த உலகில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பருவ வயதுப் பெண் வன்முறையினால் மரணமடைகிறாள் என்று தெரிவித்துள்ளது. ஆண், பெண் இருபாலரிலும் மூன்றாம் பாலின அடையாளங்களைச் சுமப்பவர்கள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். 12 முதல் 24 வயதுக்குட்பட்ட 100 மூன்றாம் பாலினத்தவரில் 51 சதவிகிதம் பேர் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையின் மூன்றாம் பாலினத்தவருக்கான சுகாதார மையம்.
பொதுவாகவே காய்ச்சல், தலைவலி போன்ற சிறு உடல் உபாதைகளைப் போலவோ அல்லது புற்றுநோய், இதய நோய்கள் உள்ளிட்ட பெருநோய்கள் போலவோ, நாம் மனநலக் குறைபாடுகளைக் கருதுவதில்லை. தனிப்பட்ட வகையில், அதனைப் பெரும் அவமானமாகக் கருதுகிறோம். மனநலக் குறைபாடுகள் உடையவர்களை மனிதர்களாக அங்கீகரிக்க மறுக்கிறோம். சமூகத்தில் பெரும்பாலானவர்கள் இவ்வாறு சிந்திப்பதால், இதனைப் பொதுமைப்படுத்திக் குறிப்பிட வேண்டிய கட்டாயம் உண்டாகியுள்ளது. இதிலிருந்து விடுபட்டு, மனநலக் குறைபாடுகளைத் தகுந்த சிகிச்சைகள் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்பதையும், அது குறித்த மூடநம்பிக்கைகளைக் களைய வேண்டியது மிக அவசியம் என்பதையும், நாம் மனதில் கொள்ள வேண்டும்.
கெடும் உடல்நலத்தைச் சீராக்குவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல மனநலத்தைக் கெட்டிப்படுத்தும் நடவடிக்கைகளும் மிக அவசியம். இளைய தலைமுறையைப் பொறுத்தவரை, ஏதாவது ஒன்றைச் செய்யுமாறு கொடுமைப்படுத்துவதால் தங்களுடைய சுய மதிப்பு பாதிக்கப்படுவதாகக் கருதுகின்றனர் பெரும்பாலானோர். சுமார் 83 சதவிகிதம் பேர் இந்தக் கருத்தை வெளிப்படுத்துவதில் இருந்தே, அவர்கள் சுதந்திரமான மனநிலையை விரும்புவது தெரிய வருகிறது.
ஆடைகளைக் கிழித்துக்கொண்டு திரிபவர்களே மனநோயர்கள் என்ற எண்ணம் இனிமேல் செல்லுபடியாகாது. வேகயுகத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மனநலப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படும் நபர்கள், அதனைக் கருத்தில்கொண்டு பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிக்க வேண்டும். அதற்குத் தக்க மனநல ஆலோசனைகளும் சிகிச்சைகளும் பெறுவது மட்டுமே போதுமானது. இதனை மனதில் கொண்டால், மன நோயர்களும் நம்மில் ஒருவர்தான் என்று எண்ணம் அனைவரிடத்திலும் பரவும். அவர்களைக் கேலி அல்லது கிண்டல் செய்வதோ, தாழ்வாகக் கருதுவதோ வழக்கத்தில் இருந்து ஒழியும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.