மாணவர்கள் மீதான தடியடிக்குக் கண்டனம்!

போராட்டத்தில் ஈடுபட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதற்கு வைகோ, பாலகிருஷ்ணன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வருகைப்பதிவு குறைவான மாணவர்களுக்கு விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை பல்கலைக்கழக நிர்வாகம் சமீபத்தில் உயர்த்தியது. பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 89 கல்லூரிகளிலும் ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தேர்வு எழுதிய நடைமுறையை மாற்றி தமிழில் தேர்வு எழுத தடை விதித்து கடந்த மாதம் அறிவித்தது.

இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நேற்று பல்கலைக் கழக வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். கலைந்து செல்ல மறுத்த மாணவர்களின் சட்டையைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகி மாரியப்பன் உள்பட 10 மாணவர்கள் மீது 147, 294 பி, 353, 506/1 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “முற்றுகையிட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முற்பட்டபோது அவர்களை சமாதானப்படுத்த முயலாமல், காவல் துறையினர் கண்மூடித் தனமாக தடியடி நடத்தியுள்ளனர்.இந்தத் தாக்குதலில் மாணவ, மாணவியர் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர் சிலரை காவல் துறையைச் சேர்ந்த பெண் காவலர்களே முரட்டுத்தனமாக அடித்துத் தள்ளுகின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. போர்க்களம் போல் நேற்று நடந்த இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது மிகுந்த மன வேதனையைத் தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மாணவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் உரிய நேரத்தில் பல்கலைக் கழக நிர்வாகமும், காவல் துறையும் பேச்சு வார்த்தை நடத்தி, மாணவர்களின் கோரிக்கைக்கு தீர்வை ஏற்படுத்தியிருந்தால் பிரச்சனை தவிர்க்கப்பட்டிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ள வைகோ, மாணவர்களின் உரிமைப் போராட்டத்தில் மிக மெத்தனமாகச் செயல்பட்ட பல்கலைக் கழக அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மீதும் தடியடி நடத்திய காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மாணவிகள் என்று கூட பார்க்காமல் ஓட, ஓட விரட்டித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தாக்குதலில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். 10 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத அத்துமீறல் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும், மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமெனவும், காயமுற்ற மாணவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்க வேண்டுமெனவும், எவ்வித முன்னறிவுப்புமின்றி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.



இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை, சுமூகமாகத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல், காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.