பிரித்வி ஷாவின் அதிரடித் தொடக்கம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸை பிரித்வி ஷா அதிரடியாகத் தொடங்கி வைத்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்களை எடுத்திருந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி இன்று (அக்டோபர் 13) இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கியது. நேற்றைய ஆட்டத்தில் 98 ரன்களுடன் களத்தில் இருந்த ரோஸ்டன் சேஸ் சதம் விளாசி 106 ரன்களில் ஆட்டமிழந்தார். பிஸு 2 ரன்களிலும், கேப்ரியேல் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஒட்டுமொத்தமாக மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்க்ஸில் 311 ரன்களைக் குவித்தது. வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் துவங்கிய இந்திய அணி நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி அசத்திய பிரித்வி ஷா இரண்டாவது டெஸ்ட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். தொடக்க வீரராகக் களமிறங்கிய கே.எஸ்.ராகுல் 25 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பிரித்வி ஷாவுடன் சத்தேஸ்வர் புஜாரா இணைந்தார். பிரித்வி ஷா கடந்த முறை போன்றே இம்முறையும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உணவு இடைவேளைக்கு முன்பே அரைசதம் எட்டினார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்களை எடுத்திருந்தது.
உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா ஜோமெல் வாரிக்கன் பந்தில் சிம்ரான் ஹெட்மயெரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 53 பந்துகளை எதிர்கொண்ட பிரித்வி ஷா 70 ரன்களை அடித்தார். இதில் 11 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இதையடுத்து கேப்டன் விராட் கோலி களத்திற்கு வந்துள்ளார்.
இந்திய அணி சற்று முன்னர்வரை 19.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களுடன் ஆடிவருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.