நடிப்பு பக்கம் திரும்பிய கமல்!

அரசியல் கட்சி தொடங்கி மக்களைச் சந்தித்துவரும் கமல்ஹாசன் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் நிறைவு விழாவில் கமல்ஹாசன்
இந்தியன் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த முதல் பாகம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பின் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்தார். கைவசம் உள்ள சபாஷ் நாயுடு, இந்தியன் 2 ஆகிய படங்களை மட்டும் முடித்துவிட்டு அரசியலில் கவனம் செலுத்துவதாக கூறினார். அரசியலில் இறங்கியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் நடிப்பு பயணத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையே விஸ்வரூபம் 2 படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானாலும் எந்தவித அதிர்வலைகளையும் ஏற்படுத்தாமல் சென்றது.
சபாஷ் நாயுடு, இந்தியன் 2 படத்தின் பணிகள் ஒருபக்கம் நடைபெற்றுவரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனை நிறைவு செய்துள்ள கமல் தற்போது மக்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் கமல் கலந்துகொண்டார். அப்போது அடுத்த படம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், “இந்தியன் 2, தேவர் மகன் 2 ஆகிய படங்கள் பட்டியலில் உள்ளன. பல்வேறு பணிகள் இருப்பதால் இந்த இரண்டு படங்களில் மட்டும் ஒப்பந்தமாகியுள்ளேன். இந்த படங்கள் எப்போது முடியும் என தெரியாது. இரண்டில் ஒரு படத்துக்கான ஷெட்யூல் நீளமானது” என்று கூறியுள்ளார்.
1992ஆம் ஆண்டு வெளியான தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசன், நாசர், கௌதமி, ரேவதி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். அந்த படத்தை மறைந்த இயக்குநர் பரதன் இயக்கியிருந்தார். இந்நிலையில் தேவர் மகன் 2 படத்தின் இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.

#பிக்பாஸ்  #கமல்ஹாசன்  # கமல், “#இந்தியன் 2, #தேவர் #மகன் 2    #சிவாஜி கணேசன், #நாசர், #கௌதமி, #ரேவதி
Powered by Blogger.