முதல்வர் மீதான ஊழல் வழக்கு திமுக கேவியட் மனு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உறவினர்களுக்கு முறைகேடாக ஒதுக்கியதாகவும், இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் நேற்று (அக்டோபர் 12) தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, முதல்வர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார்.
“3 மாத காலத்தில் சிபிஐ அதிகாரிகள் முதல்கட்ட விசாரணையை முடித்து முகாந்திரம் இருந்தால் முதல்வா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு ஆளான முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. திமுக உள்ளிட்ட கட்சிகள் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலே அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. முதலமைச்சர் மீதான புகாரில் சட்டம் என்ன சொல்கிறது என பார்ப்போம் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்ய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்திடம் அதிமுக வேண்டுகோள் விடுக்கும் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் நேற்றிரவு தெரிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் மீதான ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு முதல்வர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால் எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக்கூடாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் இன்று (அக்டோபர் 13) கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

#முதல்வர் எடப்பாடி பழனிசாமி    #சிபிஐ   #மனு தாக்கல்    #திமுக    # நீதிபதி
Powered by Blogger.