வலுவான ஸ்கோரை நோக்கி இந்தியா!

மேற்கு இந்தியத் தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை குவித்துள்ளது.
இந்தியா-மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது
டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டாவது நாளான இன்று (அக்டோபர் 13) ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தால் 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களைக் குவித்துள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளைக் காட்டிலும் இந்தியா இன்னும் 3 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. 6 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் 3ஆவது நாள் ஆட்டத்தில் வலுவான ஸ்கோரை இந்தியா எட்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் 4 ரன்களையும், பிரித்வி ஷா 70 ரன்களையும், சத்தேஷ்வர் புஜாரா 10 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் கோலி மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சிறிது நேரத்திலேயே களமிறங்கினார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 78 பந்துகளில் 45 ரன்களை எடுத்திருந்தபோது எதிரணி கேப்டன் ஜேசன் ஹோல்டெர் பந்தில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த அஜிங்யா ரஹானே மற்றும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஜோடியை பிரிக்க முடியாமல் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்கள் தடுமாறினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இரண்டாம் நாள் ஆட்டம் முடியும் வரையில் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இன்றைய ஆட்டத்தில் 174 பந்துகளை சந்தித்த ரஹானே 75 ரன்களையும், 120 பந்துகளை சந்தித்த ரிஷப் பண்ட் 85 ரன்களையும் எடுத்துள்ளனர்.
இன்னும் மூன்று நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், நளைய ஆட்டத்தில் இந்தியா சற்று விரைவாக கூடுதல் ரன்களை சேர்த்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஹானே மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் சதமடிக்கும் பட்சத்தில் அணியின் ஸ்கோர் எளிதாக 400 ரன்களைக் கடக்கும் வாய்ப்புள்ளது. எனவே இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த இந்தியா தயாராகி வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.