கமலுக்கு தமிழிசை கண்டனம்!

“கல்லூரிகளில் சென்று பரப்புரை செய்வதை கமல்ஹாசன் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து, கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகர் கமல்ஹாசன், கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் அரசியல் குறித்தும் பேசிவருகிறார். தற்போது சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன், அங்கு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிவருகிறார்.
முன்னதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், “தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கிடையாது. காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கான தேவை இப்போது இல்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணி மெதுவாகவே உடையட்டும். ஆனால் அதனை நான் செய்ய மாட்டேன். அவர்கள் செய்ய வேண்டிய வேலை அது” என்று தெரிவித்திருந்தார்.
சென்னை மணலியில் இன்று (அக்டோபர் 14) செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதுகுறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “திமுகவுடன் காங்கிரஸ் இருந்தாலும், கமல்ஹாசனுடன் காங்கிரஸ் இருந்தாலும் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை. கமல்ஹாசன் சேர்வதால் காங்கிரஸின் தோல்வி இன்னும் உறுதி செய்யப்படுகிறது. காங்கிரஸ் உடன் யார் இருந்தாலும் அவர்கள் தோல்வியடையப் போகிறார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “கல்லூரி மாணவர்களை படிக்க விடுங்கள். உங்களின் அரசியல் களத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் அரசியல் செய்யாதீர்கள்” என்றும் கமல்ஹாசனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.