பெண் நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்!

பெண் எப்போதும் அடங்கிப்போகமுடியாது/ பணிந்து போகமுடியாது " என்று சாதாரணமாக ஒன்றைக்கூறத்தொடங்கினாலே வேற்றுக்கிரகவாசி போல இமையைச் சுருக்கிப்பார்க்கும் சமுதாயத்தையே நேரில் கடந்து பழக்கப்பட்ட எனக்கு பெண்மொழியின் வீரியத்தையும் , ஆளுமைமிக்க பெண்களையும் அடையாளப்படுத்திய பெருமை எப்போதும் ஊடறுவுக்கும் ரஞ்சியக்காவிற்குமே உரித்தானது .
இந்த வருடம் மட்டக்களப்பு ஊறணியில் இடம்பெற்றிருந்த
" மட்டக்களப்புப்பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்ணியச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் " எனக்கு இரண்டாவது சந்திப்பாக அமைந்திருந்தது . முதன்முறை சென்றுவந்த
மும்பைச்சந்திப்பானது அந்நியச்சூழலை அவதானிக்க வந்த ஓர் அவதானியாகவே என்னை கருதச்செய்திருந்ததுடன் நிறுத்தியிருந்தது .ஆனால் மட்டக்களப்பு பெண்ணியச்சந்திப்பானது ஈழத்து மண் வாசனையுடன் இன்னமும் சேர்ந்தே கிடக்கும் உள்நாட்டு யுத்தம் தந்த வலிகளையும் வடுக்களையும் வெறுமைகளையும் இழப்புக்களையும் குடைந்தெடுத்துக் கையில் தந்துவிட்டுச்சென்றிருக்கின்றது .
சுவிஸ், கனடா,மலேசியா,மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்தும்
இலங்கையின் யாழ்ப்பாணம் ,மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா,மலையகம் போன்ற பல பாகங்களிலிருந்தும் நூற்றைம்பதற்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டோம்.
அரசியல் , சமூகவியல், சிறுவர் துஸ்பிரயோகமும் குடும்ப அமைப்பு முறையும் , வன்முறையின் முகங்கள் , சட்டம் , ஆண்மொழியின் கட்டுடைப்பு, சடங்கும் சட்டமும் , வர்க்கமும் சாதியும் ,
கலைகளூடாகப்பேசப்படும் பெண்ணியம் என்ற தலைப்புக்களின் கீழ் சுமார் 22 கட்டுரைகளும் கருத்துக்களும் அனுபவங்களும் பகிரப்பட்டன.
அரசியலில் பெண்களின் பங்கேற்பு - கல்பனா/
அரசியலும் பெண்களும் - செல்வி மற்றும் கலைவாணி/
மாற்றுத் திறனாளிகளும் பிரச்சினைகளும் - சரோஜா சிவச்சந்திரன்/
பெண் போராளிகள் - வெற்றிச்செல்வி /
போருக்குப் பின் பெண்களின் நிலை- நளினி ரட்ணராஐா /
தனித்துவாழும் பெண்கள் - எம்.விஜயகுமாரி/
சிறைக்கைதிகளாக இருக்கும் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் - பிரியதர்சினி சிவராஜா/
சிறுவர் துஷ்பிரயோகமும் குடும்ப அமைப்பும் - மதுஷா மாதங்கி /
சட்டமும் நடைமுறையும் - சிநேகா/
விளம்பரங்களூடான வன்முறைகள்- கோகிலா/
ஊடகக்கல்வியிலும் ஊடகத் தொழிற்றுறையிலும் பால் நிலைச் சமத்துவம் பேணப்படாமை - அனுதர்ஷி/
பழமொழிகளும் பெண்களும் - ஞானவள்ளியின் கட்டுரை வாசிக்கப்பட்டது
பாலிழிவு- செவ்வியல் வழக்கும் வாய்மொழி வழக்கும் - மாலதிமைத்ரி/
முஸ்லிம் தனியார் சட்டச் சீர்திருத்தமும் பெண்களும் - லறீனா அப்துல் ஹக்/
மலேசிய இஸ்லாமியப் பெண்களுக்கு கந்துமுனை அகற்றும் சடங்கு - யோகி/
பாலியல் தொழிலும் ஆண் மேலாதிக்கமும் - ரஜனி/
பெண்ணிய நோக்கில் சாதி,மதம்,வர்க்கம் - சுகிர்தராணி/
சாதியும் பெண்களும் - கவின்மலர்/
ஓவியங்களின் ஊடான பெண்ணியப் பார்வை - கமலா வாசுகி/
கவிதைப்பெண்களும் என் கவிதை அனுபவமும் - விஜயலக்சுமி /
ஓவியங்களும் எனது அனுபவங்களும் - ஜெனனி /
ஆகிய தலைப்புக்களின் கீழ் அவ்வவ் துறைகளில் ஆர்வமும் ஈடுபாடும் திறனும் கொண்ட பெண்கள் தத்தம் கருத்துக்களையும் அனுபவங்களையும் பார்வைகளையும்
பகிர்ந்துகொண்டனர். இந்த அமர்வுகளின் போது கமலா
வாசுகி, ஔவை, காயத்ரீ , யோகி,
ஹஷானா, சந்திரலேகா, வெற்றிச்செல்வி ஆகியோர் தலைமைதாங்கியிருந்தனர்.
மிக முக்கியமாக ,போர்கள் எப்போதும் பெண்களையும் சிறுவர்களையும் தான் பேரளவில் பாதிப்படைய வைக்கின்றன என்பதற்கிணங்க உள்நாட்டு யுத்தம் தந்த அதிர்வுகளிலிருந்து மீளாத பெண்களின் உடல் உள சமூக பிரச்சினைகளையும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் கூட முழுமையாக அவர்களைச்சென்று சேர்வதில்லை என்ற கசப்பான நடைமுறை உண்மைகளையும் நேரில் அவதானிக்க முடிந்தது.
தொடர்சியாக , பெண்களின் சுமக்க முடியாத கனதிகளையும் கஸ்டங்களையும் கலந்துரையாடல் நேரத்தில் பகிர்ந்துகொண்டதுடன் அதன் வாயிலாக ஆணாதிக்க மொழிக்கட்டமைப்புக்குள்ளும் , பெண்களுக்கெனக் கோடிட்டு வைத்திருக்கும் கலாசாரத்திற்குள்ளும் பெண்ணின் சுயமும் சுதந்திரமும் எவ்வெவ் வடிவங்களில் சுரண்டப்படுகின்றது என்பதையும் அதை எப்படி நாம் கடந்து கொண்டுவருகின்றோம் என்பதையும்
வீடு தொடங்கி பொதுவெளியிலும் பெண்ணாக எதிர்கொள்கின்ற வன்முறைகளையும் வசைபாடல்களையும் சாடியதுடன் அரசியலில் பெண்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் அதன் ஊடாக பெண்களின் பிரச்சினைகளை இலகுவாகவும்/ மென்னுணர்வுடனும் அணுகமுடியும் என்பதையும் பாலியல் ரீதியாக இன மத மொழி வேறுபாடற்று பெண்ணுடல் சிதைக்கப்படுவதையும் அதிலும் மிக உச்சமாக இனத்துவேசம் இனவழிப்பு என்பவற்றில் பலிக்கடா ஆக்கப்பட்ட பெண்களின் வரலாற்றுத்துயர்கள் பற்றியும் பேசிக்கொண்டோம்.
இரு நாளும் மிக வேறுபட்ட ஓர் பிரமாண்டமான பிரதேசத்திற்குள் இருந்தது போல உணரப்பட்டாலும் மிக விரைவாக நாம் எல்லோரும் பிரியும் நேரம் வந்தது. இலங்கையின் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு வவுனியா திருகோணமலை மலையகம் பகுதிகளிலிருந்து வந்த பெண்களையெல்லாம் கனதியுடன் வழியனுப்பிவிட்டு தொப்புள் கொடி உறவுகளையும் ஈழமண் வாசனையையும் நுகர்ந்துகொள்வதற்காக மேலும் ஒரு கிழமை இலங்கையில் தங்கியிருக்கக் காத்திருந்த ரஞ்சி, மாலதி, கல்பனா ரஜனி, யோகி , சுகிர்தராணி, விஐி,கவின் ,சினேகா மற்றும் கோகி அக்காக்களுடன் நானும் இணைந்துகொண்டேன். அன்றைய இரவு மட்டக்களப்பு விஐியக்கா வீ்ட்டில் பாட்டு நடனம் மற்றும் உரையாடல்களுடன் இனிதாய்க்கழிய அடுத்த நாட்காலை மௌனகுரு சேர் மற்றும் சந்திரலேகா மிஸ்ஸை சூரியா பெண்கள் அமைப்பைச்சேர்ந்த அமலாக்கா வீட்டில் சந்தித்து ஈழத்தில் பெண்ணிய உரையாடலுக்கான தளம் ஆரம்பித்து வளர்ந்து கொண்டாடப்படுகின்ற வளர்ச்சி மற்றும் அரசியல் நிலைமைகள் பற்றி உரையாடிக்கொண்டதுடன் மௌனகுரு சேரின் இனிமையான தெளிவான குரலில் இராவணன் நாடகத்தின் சில பாடல்களை ஆர்வத்துடனும் குதூகலத்துடனும் பாடக்கேட்டு மகிழ்ந்தோம். அத்துடன் சூரியா பெண்கள் அமைப்பினால் வெளியிடப்பட்ட "கூற்று " இதழையும் பெற்றுக்கொண்டு அதன் அமைவிடத்தையும் பார்த்துவிட்டு கிளிநொச்சி போய் அங்கிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள யாழினி அக்கா வீட்டை நோக்கிப்பயணிக்க ஆயத்தமானோம்.

Powered by Blogger.