அரசியல் கைதிகள் விடயத்தில் தவறினால் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்!


அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும். கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு செய்யத் தவறினால் தமிழினத்திற்கு மாபெரும் துரோகம் செய்த துரோகிகளாகவே அடையாளப்படுத்தபடுவீர்கள் என யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமேனன் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலை மாணவர்களால் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட நடைபவனி அனுராதபுரம் சிறைச்சாலை முன்றலில் முடிவடைந்த நிலையில், அரசியல் கைதிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக மாணவர்கள் ஆகிய நாங்கள் அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்து போயுள்ளார்கள். நாங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காகத் தான் தாங்கள் போராடினார்கள் எனவும், ஆனால் இன்று நாங்களும் சுதந்திரம் இல்லாமல் தங்களுகளுக்காக போராடும் நிலை காணப்படுவதாக கூறி கவலையடைந்தார்கள்.

எங்களுடைய நோக்கம் இந்த அரசியல் கைதிகளின் பிரச்சனையை வெளியில் கொண்டு வரவேண்டும் என்பதே. அதற்காகவே இந்த நடை பயணத்தை ஆரம்பித்து நடந்து வந்திருந்தோம். வவுனியா வரையும் பொதுமக்களின் ஆதரவு அதிகமாக காணப்பட்டது. ஆனால் பொறுப்புக் கூற வேண்டிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலரை தவிர, வேறு யாரும் தொடர்பு கொண்டு எது, என்னவென்று இதுவரை கேட்கவில்லை. நாங்கள் யாருக்காக நடந்து வந்தோம்?, எதற்காக நடந்து வந்தோம்? அவர்கள் அறிந்தும் என்னவென்று கேட்கவில்லை.

எங்களுடைய வாக்குகளால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமாக அரசியல் கைதிகள் விடயத்தில் பாரிய குற்றத்தை செய்து வருகிறார்கள். கைதிகள் விடயத்தில் எதுவித கரிசனையும் காட்டவில்லை. அவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கிற நிலையே காணப்படுகிறது.

இதேநேரம், இந்த 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகவிருந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு இவ்வாறான பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்று தங்களுக்குள் பேசியதாக கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இதற்கு மாறாக ஜனாதிபதியை ஒரிருவர் போய் சந்திப்பதும், வாக்குறுதிகளை விடுவதும், அறிக்கை விடுவதுமாகவே இருந்து வருகிறார்கள். அரசியல் கைதிகள் விடயத்தில் 16 பாராளுமன்ற உறூப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக கண்டிப்பாகவும், உரிமையாகவும் கேட்டுக் கொள்கின்றோம்.

நீங்கள் எங்களின் வாக்குகள் மூலம் பாராளுமன்றத்திற்கு சென்றீர்கள். நீங்கள் தான் இப்பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும். உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும். மாறாக எங்களால் போராடி உலகிற்கு தெரியப்படுத்த முடியுமே தவிர, எங்களால் இதற்குரிய தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாது. எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முடித்து வைக்க விருப்பமாக உள்ளது. ஆனாலும் எங்களால் அப்படி முடித்து வைக்க முடியாமல் இருக்கிறது. நாங்கள் உரிமையாக கேட்கின்றோம். எங்களது உரிமைக்காக போராடிய அந்த உறவுகளை மீட்க ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுங்கள். 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு செய்யத் தவறினால் தமிழினத்திற்கு மாபெரும் துரோகம் செய்த துரோகிகளாகவே அடையாளப்படுத்தபடுவீர்கள் எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.