#MeToo சினிமாவிலிருந்து விலகிவிடுங்கள்!

“எட்டு வருஷத்துக்கு முன்னாடி இப்படி நடந்து கிட்டாரு, பத்து வருஷத்துக்கு முன்னாடி அப்படி நடந்துக்கிட்டாருன்னு சொல்றவங்க, தயவு செய்து சினிமாத் துறையிலிருந்து விலகிப் போயிருங்க” என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகக் கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு பெண்களும் #METOO என்ற ஹேஷ் டேக்கில் இணைந்து தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.

பாடகி சின்மயி, வைரமுத்துவிடம் மட்டும் நின்றுவிடாமல் பெண்களுடன் தவறாக நடந்துகொண்டதாகக் கூறிப் பல்வேறு பிரபலங்களின் பெயர்களைக் கூறிவருகிறார். நடிகர் ராதா ரவியும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டார் என்று ட்விட்டரில் குற்றச்சாட்டை முன்வைத்தார் சின்மயி.

இந்த விவகாரம் குறித்து 'அவதார வேட்டை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, “பொதுவாக இதுமாதிரியான ஆடியோ விழாவுக்கெல்லாம் நான் வருவதே இல்லை. ஆனால் இதுபோன்ற சிறு படங்களுக்கெல்லாம் வந்து ஆதரிக்க வேண்டும் எனும் நோக்கத்தில்தான் வந்தேன். இது மாதிரியான சிறிய படங்கள் பெருக வேண்டும். அதுதான் சினிமாத் துறைக்கு நல்லது.

ஆனால் இப்போது சினிமாத் துறை நல்ல விதமாக இல்லை. யாரிடமும் பேசுவதற்கும் பயமாக இருக்கிறது. உதவி இயக்குநர்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டு இயக்குநர் ஆகிறார்கள். தயவுசெய்து அவர்கள் மேல் பழி பாவம் போட்டுக் கொன்றுவிடாதீர்கள். சினிமாவில் ஒப்பனை பயிற்சி வைக்க வேண்டுமென்றால் ஒரு அறையில்தான் வைக்க முடியும். அதற்குள் ஒரு இயக்குநர் வந்துவிட்டால், உடனே அவர் கன்னத்தைக் கிள்ளி விட்டார், இடுப்பைக் கிள்ளிவிட்டார் என்ன சொல்லி ‘மீடூ’வில் பதிவு செய்துவிடுகிறார்கள். இப்படி செய்து நீங்களே உங்களை தரம் தாழ்த்திக்கொள்ளாதீர்கள். ஊரில் எவ்வளவோ சாமியார்கள் எல்லாம் பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு மற்றவர்கள் மேல் மட்டும் குற்றம் சொல்வது என்ன நியாயம். முதலில் அந்த சாமியார் உன்னை என்ன செய்தார் என்று சொல்ல வேண்டுமல்லவா. என் மீது புகார் வைத்ததற்கு நான் நீதிமன்றத்தை சந்திக்கவும் தயாராக உள்ளேன்.

நடிகர் விஷால் அருமையாக சொன்னார். பிரச்சினை இருக்கும்போதே புகார் கொடுத்தால் நாங்கள் உடனே நடவடிக்கை எடுப்போம் என்று. அதை விட்டுவிட்டு பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இப்போது வந்து சொன்னால் என்ன நியாயம்? அதை எப்படிக் கண்டுபிடிப்பது?

சலூன் கடையிலும், டீக்கடையிலும் உக்கார்ந்து முன்னாடியெல்லாம் அரசியல் பேசுவாங்க. இப்ப அரசியலே குழம்பிப் போயிருக்கு. அதனால் அவங்க பேசுறதுக்கு இந்த ‘மீ டூ’தான் டாபிக். ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஆனா கூத்தாடி ரெண்டுபட்டா அது ரொம்ப மோசமாயிரும். முதலில், எட்டு வருஷத்துக்கு முன்னாடி இப்படி நடந்துகிட்டாரு, பத்து வருஷத்துக்கு முன்னாடி அப்படி நடந்துக்கிட்டாருன்னு சொல்றவங்க, தயவு செஞ்சு சினிமாத் துறையிலிருந்து விலகி போயிருங்க. இவங்களையெல்லாம் சினிமாவில் பயன்படுத்தாதீர்கள்.

எதுலையும் ஒரு நியாயம் இல்லேன்னா எப்படி? வட நாட்டிலிருந்து ஒரு லேடி, ‘சரி... ஆண்களுக்கு என்ன பாதுகாப்பு’னு கேக்கறாங்க. அதுவும் நியாயம்தானே. அப்படிக் கேட்டா பெண்களுக்கு எதிரியாயிருவோம்னு பயந்துட்டாங்க இங்கே!

இத்தனை நடந்துட்டிருக்கு. சினிமா செத்துக்கிட்டிருக்கு. அதை கவனிங்கய்யா முதல்ல. படம் ஓடுதா தயாரிப்பாளருக்கு லாபமா, தியேட்டார்காரங்களுக்கு சந்தோஷமான்னு பாருங்க. அதைவிட்டுவிட்டு மீ டூங்கறீங்க. இதுல ஒருத்தர், தொண்டர்களைத் தேடி வரலை, தலைவர்களை தேடி வந்திருக்கேன்னு சொல்றாரு. சினிமாவுல இருந்துகிட்டு, அதைக் காப்பாத்த என்ன பண்ண முடியும்னு பாருங்க முதல்ல...” என்று பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.