வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் இந்தியா!

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியா மொத்தம் 22 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.

உலக நாடுகளின் அந்நிய நேரடி முதலீடுகள் குறித்த விவரங்களை ஐக்கிய நாடுகள் (ஐநா) சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018ஆம் ஆண்டின் முதல் பாதியில் சர்வதேச அளவில் அந்நிய நேரடி முதலீடுகள் 41 சதவிகிதம் குறைந்துள்ளன. அமெரிக்க அரசு மேற்கொண்ட வரித் திருத்தங்களால்தான் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. தெற்காசியாவிலேயே இந்தியாதான் அதிகளவிலான அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்தியா மொத்தம் 22 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது தெற்காசியாவில் ஈர்க்கப்பட்ட மொத்த முதலீடுகளில் 13 சதவிகிதமாகும் என்று ஐநாவின் வர்த்தக மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆறு மாதங்களில் அதிகமான அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது. அதிகபட்சமாக சீனா 70 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்து முதலிடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து 65.5 பில்லியன் டாலரையும், அமெரிக்கா 46.5 பில்லியன் டாலரையும், நெதர்லாந்து 44.8 பில்லியன் டாலரையும், ஆஸ்திரேலியா 36.1 பில்லியன் டாலரையும், சிங்கப்பூர் 34.7 பில்லியன் டாலரையும், பிரேசில் 25.5 பில்லியன் டாலரையும் ஈர்த்துள்ளன. ஆனால் உலக நாடுகளின் ஒட்டுமொத்த அந்நிய முதலீடுகள் இந்த ஆறு மாதங்களில் 470 பில்லியன் டாலர் மட்டுமே. இது சென்ற ஆண்டில் கிடைத்த 794 பில்லியன் டாலரை விட 41 சதவிகிதம் குறைவாகும்.

No comments

Powered by Blogger.