றோ தொடர்பில் ஜனாதிபதி கருத்து வெளியிடவில்லை!

இலங்கை - இந்தியத் தலைவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட தொடர்புகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சில உள்நோக்கம் கொண்ட தரப்புக்களினால் திரிபுபடுத்தப்பட்ட விடயங்கள் பரப்பப்படுவது கவலைக்குரியதாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய புலனாய்வு சேவை ஒன்றுடன் தொடர்புபடுத்தி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக இன்று வெளியிடப்பட்டுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக செய்திகள் தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதியை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதி முயற்சியில் இந்திய உளவுத்துறையின் எந்தவொரு ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக ஜனாதிபதி உடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சதித்திட்டம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

படுகொலை சதி முயற்சி குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், இன்று முற்பகல் இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தபோது, இதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளுக்கும், இரு தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட தொடர்புகளுக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் சில உள்நோக்கம் கொண்ட தரப்புக்களினால் இத்தகைய திரிபுபடுத்தப்பட்ட விடயங்கள் பரப்பப்படுவது கவலைக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.