நவராத்திரி: வெடிக்கும் ‘இறைச்சி’ சர்ச்சை!

வடஇந்திய மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டம் ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, இறைச்சிக் கடைகளை இழுத்து மூட வேண்டும் என இந்துத்துவா அமைப்புகள் சில இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளன. அதே நேரத்தில் மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட
மாநிலங்களில் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. “நாங்கள் துர்கா பூஜையின் போது இறைச்சியை உண்போம்; இறைச்சியையே பிரசாதமாகவும் வழங்குவோம்” என்று எதிர்க்குரல்கள் எழுந்துள்ளன.
நவராத்திரி துர்கா பூஜையை முன்னிட்டு, பார்ச்சூன் எண்ணெய் நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. தற்போது நடைபெறும் பிரச்சினைக்கு, இதுவே மூலக்காரணமாக அமைந்தது. இந்த விளம்பரத்தில் துர்கா பூஜையை ஒட்டிச் சமைக்கப்படும் உணவுகளில் மீன் இறைச்சியும் இடம்பெற்றிருந்தது. நவராத்திரி காலத்தில் இறைச்சி சாப்பிடத் தூண்டும் விளம்பரங்களை எப்படி வெளியிடலாம் என இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து, இந்த விளம்பரத்தை பார்ச்சூன் நிறுவனம் திரும்பப் பெற்றது. ஆனால் மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் நவராத்திரி விழாவுக்கும் துர்கா பூஜைக்கும் வித்தியாசம் உண்டு என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, துர்கா பூஜை என்பது அம்மாநிலத்தின் ஒரு கலாச்ச்சாரத் திருவிழாவாகப் பார்க்கப்படுகிறது. துர்கா பூஜைக்கான சிலைகளை வடிவமைக்க, முதன்முதலில் பிடிமண் எடுத்துத் தருவதே பாலியல் தொழிலாளிகள் என்பதை இவர்கள் மறந்துவிடுகின்றனர்.
அது மட்டுமல்லாமல், துர்கா பூஜையை இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்கள், வெளிமாநிலங்களில் இருந்து குடியேறியவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடுகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் மீன் என்பது சைவ உணவாகத்தான் கருதப்படுகிறது. இன்றும், அங்கு நடைபெறும் திருமண நிகழ்வுகளில் இடம்பெறும் சீர்வரிசைகளில் மீனுக்கும் இடம் உண்டு.
“துர்கா பூஜை நடைபெறும் நாட்களில் அம்மனுக்கு இறைச்சியைப் படைப்பதும், துர்கா பூஜை பந்தலில் இறைச்சியைப் பிரசாதமாகப் பகிர்ந்தளிப்பதும் அம்மனுக்கு செய்கிற நேர்த்திக்கடன்களில் ஒன்றாகக் கருதுகின்றனர். நவராத்திரியைப் பொறுத்தவரை, அதன் கடைசி நாளில் ராவணனை ராமன் வதம் செய்ததாகப் போற்றப்படுகிறது; துர்கா பூஜையைப் பொறுத்தவரை, மகிசாசுரனை துர்கை வதம் செய்த நாளாகப்போற்றப்படுகிறது. வட இந்தியர்களின் கலாச்சாரம் வேறு; எங்களின் கலாச்சாரம் வேறு; ஆகையால் மீன் உள்ளிட்ட இறைச்சியை உண்ணக் கூடாது என எங்களைவலியுறுத்தாதீர்கள்” என்பது மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் துர்கா பூஜையை கொண்டாடும் இந்துக்களின் குரலாக ஒலிக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.