கமலுக்கு அரசியல் அனுபவம் போதாது-துரைமுருகன்!

“கமலுக்கு அரசியல் அனுபவம் போதாது” என்று திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் இன்று (அக்டோபர் 18) செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், நேற்று உளுந்தூர் பேட்டை கூட்டத்தில் திமுகவை விமர்சனம் செய்த முதல்வருக்கு பதிலளித்தார்.

“ஆளுங்கட்சி மீதான குற்றங்களைச் சொல்வது எதிர்க்கட்சியின் வேலை. ஒரு எதிர்க்கட்சியாக எங்கள் வேலையை செய்துள்ளோம். முகாந்திரம் இருப்பதால்தான் முதல்வர் மீதான டெண்டர் முறைகேட்டு புகாரை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இவ்வழக்கில் தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு பதில் சொல்ல வேண்டியது, வழக்கை எதிர்கொள்ள வேண்டியது, ஊழல் நடக்கவில்லை என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுடையது. அதைவிடுத்து நாங்களும் வழக்கு தொடர்வோம் என்று சொன்னால் அதனால் என்ன பலன். முகாந்திரம் இருந்தால் வழக்கு தொடரட்டும், வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லையே” என்று தெரிவித்த துரைமுருகன்,

புதிய தலைமைச் செயலக விவகாரத்தை விசாரிக்க ஆணையம் அமைத்ததே தவறு என்று சொல்லியிருக்கிறோம். எங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தில் பொய் வழக்கு போட்டால் அதற்கு நீதிமன்றத்தில் தடையாணை வாங்கக் கூடாதா? ரகுபதி ஆணையமே தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியது. ஆணையம் அமைத்ததால் இரண்டரை வருடத்தில் இரண்டரை கோடி ரூபாய் நஷ்டம்தான் வந்தது என்றும் நீதிமன்றமே கூறியுள்ளது எனவும் விமர்சித்தார்.

“ஆளுநர் பன்வாரிலால் நிலையாக இருப்பதில்லை. துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்ததாக தற்போது கூறுகிறார். நாங்கள் ஏற்கனவே இதுதொடர்பாக அவரிடம் புகார் அளித்தோம். இத்தனை நாள் ஏன் அதனைக் கூறவில்லை” என்று சந்தேகம் எழுப்பிய துரைமுருகனிடம், திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்பான கமலின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “கமல் எனக்கு நல்ல நண்பர். பிடித்தமான நடிகர். ஆனால் அவருக்கு அரசியல் அனுபவம் போதாது என்பது என்னுடைய கணிப்பு. அவருடைய கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. திமுகவுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணியில் இருந்திருக்கிறது. இனியும் இருக்கும். இடையில் எந்த சலசலப்புக்கும் காங்கிரஸும் நாங்களும் ஆட்பட மாட்டோம்” என்று பதிலளித்தார் துரைமுருகன்.

மேலும், திமுக வலிமையாக இருக்கிறது. அதனால் அனைவரும் எங்களைத்தான் உரசிப் பார்க்கிறார்கள். அதனைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் வேறுபாதையில் சென்றுகொண்டிருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.