மத்திய அரசு மசோதா நிறைவேற்ற வேண்டும்!

"ராமர் கோவில் அமைக்கப்படுவதற்கான வழியை மத்திய அரசு சட்டத்தின் மூலம் அமைத்துத் தரவேண்டும்" என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.

நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் பகுதியில் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 18) விஜயதசமி கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி.

விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசும்போது, "ராமர் கோவிலானது ராம ஜென்ம பூமியில் தான் அமைக்கப்பட வேண்டும். ஏனென்றால், அங்கே இதற்கு முன்பு கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே மத்திய அரசு கோவில் அமைப்பது தொடர்பான மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும். மேலும், இக்கோவிலை அமைக்கும் போது சுயமதிப்பு கண்ணோட்டத்தில் அமைக்கப்பட வேண்டும். அவை நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வழி வகுப்பதாக இருக்கும். ஆனால் இப்படியான தேசிய நலன் சார்ந்த விஷயம் சில அடிப்படை கூறுகளால் மறுக்கப்பட்டு, சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக தடுக்கப்படுகிறது" என்றார்.

முன்னதாக விஹெச்பி அமைப்பினர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை கடந்த அக்டோபர் 5ஆம் தேதி சந்தித்தனர். ராமர் கோவில் அமைக்கப்படுவது தொடர்பாக சட்ட மசோதா தயாரித்து நாடாளுமன்றத்தின் மூலம் இந்த வருடமே நிறைவேற்ற வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

மேலும் நாட்டின் முக்கிய விவகாரங்களை குறித்து மோகன் பகவத் பேசியதாவது

ரபேல் விவகாரம்

"உலகளாவிய சந்தையில் பொருட்களை விற்பதும், வாங்குவதும் வர்த்தக உத்திதான். ஆனால் நம்முடைய பாதுகாப்பு சார்ந்த விவகாரத்தில் யாரையும் நம்பி இருக்காமல் தொழில்நுட்பத்தை பெற்றுக்கொண்டு, உள்நாட்டுத் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

இடதுசாரி செயற்பாட்டாளர்கள்

"மாவோயிஸம் நகர்புறத்தில் தான் செயல்படுகிறது. மாவோயிஸ்டுகள் சமூகத்தில் ஒடுக்கப்படும் மக்களை தங்களது திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாட்டின் எதிரிகளிடம் இருந்து இவர்கள் ஆதரவைப் பெற்றுக்கொண்டு, செல்கின்ற இடங்களில் எல்லாம் நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தி தருகிறார்கள். இன்னும் குறிப்பாக அவர்கள் நாட்டிற்கு எதிரான கருத்து உடையவர்களையே தலைவர்களாகவும் ஏற்றுக் கொள்கிறார்கள்" என்று குற்றம் சாட்டிய மோகன் பகவத்,

ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எதிராக மக்கள் வாக்களியுங்கள். 100% மக்களும் வாக்குச் சாவடிகளுக்கு சென்று நாட்டின் ஒற்றுமைக்காக வாக்களிக்க வேண்டும். மேலும் தேர்தலின் போது நோட்டாவிற்கு யாரேனும் வாக்களிப்பார்கள் என்றால், அவர்கள் நாட்டின் நலனுக்கு எதிராகச் செயல்படும் கட்சிகளை ஆதரிப்பவர்கள் என்று பொருள்படும்" என்று வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.