கொழும்பு வான்வெளி மாநாடு ஆரம்பம்!

கொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வியாழக்கிழமை) அத்திடிய ஈகில் லேக் சைட் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

வான்வெளி பாதுகாப்பு தொடர்பான சர்வதேச அறிவை இலங்கை மற்றும் வலய நாடுகளுக்கு மத்தியில் பரிமாறிக்கொள்ளும் நோக்குடன் இம்மாநாட்டை ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார்.

இலங்கையின் பூகோள மூலோபாய முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான “வான்வெளி மூலோபாயம்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த மாநாடு இலங்கை விமானப் படையினால் நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை தொடர்பாக விசேட கவனம் செலுத்தி, தீவொன்றின் பூகோள மூலோபாய முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குச் சாதகமாக அமையும் வான்வெளி உபாயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடுவதற்காக தேசிய மற்றும் சர்வதேச இராணுவம் ஆகியோருடன் ஏனைய கல்விமான்களை ஒன்று திரட்டும் பொதுத் தளமாக இம்மாநாடு அமைந்துள்ளது.

பொது கருப்பொருள் ஒன்றின் கீழ் அறிவு, அனுபவம் மற்றும் சிறப்புத் தேர்ச்சிகளை பரிமாறிக்கொள்வதற்கு உலக இராணுவத் தளபதிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், சர்வதேச புலனாய்வு துறை உறுப்பினர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் இங்கு ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.

இம்மாநாட்டில், அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு குழுவின் பிரதானி அட்மிரல் ரவீந்தர விஜேகுணவர்தன உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் பிரதானிகள் பலர் கலந்துகொண்டனர்.

குறித்த கொழும்பு வான்வெளி மாநாடு இன்றும் நாளையும் கொழும்பு அத்திடிய ஈகல் லேக் சைட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


#colombo  #tamilnews #srisenna #maithiri  #இலங்கை   #விமானப் படை  #வான்வெளி  #மைத்திரிபால சிறிசேன  #கொழும்பு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.