சபரிமலை: தொடரும் பதற்றம்!

கேரள மாநிலம் நிலக்கல்லில் இந்து அமைப்பினரோடு சேர்ந்து பாஜக இளைஞரணி போராட்டம் நடத்தியதால்,போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதைத் தடுத்து நிறுத்தவும், பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தும் நேற்று முதல் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், கோயிலுக்கு வருகின்ற பெண் பக்தர்களை வழிமறித்து திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, போலீசார் தடியடி நடத்தினர். இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களும் போலீசார் மீது கல் வீசினர். இந்தத் தாக்குதல்களில் 10 பத்திரிகையாளர்கள்,15 போலீசார், 5 பக்தர்கள் காயமடைந்தனர்.
பதற்றமான சூழ்நிலை காரணமாக இன்று முதல் சபரிமலை சன்னிதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூகு. சபரிமலைக்கு பெண்கள் செல்வதை எதிர்த்து, பிரவீண் தொகாடியா தலைமையிலான அந்தராஷ்ட்ரிய பரிஷ்த் மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று (அக்டோபர் 18) மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரி - திருவனந்தபுரம் செல்லும் அரசு பேருந்துகளும், நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரத்திற்கு வரை இயக்கப்படும் பேருந்துகளும் களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், இங்கு 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காய்கறிகளை எடுத்துச் செல்லும் லாரிகளும் சோதனைச் சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முழு அடைப்பு என்ற பெயரில் வாகனங்களை யாராவது தடுத்து நிறுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில காவல் துறை டிஜிபி லோக்நாத் பெஹரா எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், சபரிமலை மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் குறித்து சபரிமலை கோயில் வளாகத்தில் மாநில அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில், ஐயப்ப பக்தர்களுடன் எந்தவிதமான மோதலையும் அரசு விரும்பவில்லை. ஆனால், பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அரசியல் ஆதாயத்துக்காக பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.
புதிய மேல்சாந்தி
சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக வாசுதேவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 9 பேர் அடங்கிய பட்டியலில் குலுக்கல் முறையில் வாசுதேவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சபரிமலை மேல் சாந்தியாக பெங்களூருவைச் சேர்ந்த வி.என்.வாசுதேவன் மற்றும் மாளிகைப்புரம் மேல்சாந்தியாக நாராயணன் நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நடவடிக்கை
சபரிமலைக்குச் செல்ல விரதம் இருந்த பெண் மீது கேரள தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தன்னுடைய விரதம் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். சபரிமலைக்குச் செல்வது தெரியவந்ததையடுத்து, பெண் ஊழியர் கட்டாயவிடுப்பில் அனுப்பப்பட்டார். அதுபோன்று, இணையதள இதழ் ஒன்றிலும் பெண் ஊழியரின் விரதம் பற்றிச் செய்தி வெளியாகியுள்ளது.
மீண்டும் பதற்றம்
நிலக்கல்லில் 144 தடையை மீறி பேரணி நடைபெற்றதால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. இந்து அமைப்பினரோடு இணைந்து பாஜக இளைஞரணி பேரணியில் ஈடுபட்டதால், நிலக்கல்லில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என கோஷமிட்டனர். மேலும், போராட்டக்காரர்கள் பம்பையை நோக்கிச் செல்ல முயன்றபோது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலக்கல்லில் பாஜக ஊர்வலம் நடத்தியது குறித்து பத்தினம்திட்டா ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். எஸ்.பி நாராயணன் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
பெண் பத்திரிகையாளர் தடுத்து நிறுத்தம்
கோயில் நடை திறக்கப்பட்ட இரண்டாம் நாளிலும், பதற்றமான சூழ்நிலையிலும் சபரிமலைக்கு பக்தர்கள் சென்றுக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர் ஒருவர் சபரிமலைக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்தியுள்ளனர் போராட்டக்காரர்கள். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளராக மும்பையில் பணியாற்றி வரும் சுகாசினி ராஜ் சபரிமலை செல்வதற்காக, பம்பையிலிருந்து செல்லும்போது அப்பாச்சிமேட்டில் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்களின் பெரிய எதிர்ப்பால், வேறுவழியின்றி அவர் திரும்பிச் சென்றுள்ளார்.

No comments

Powered by Blogger.